
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையே முல்தானில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
கராச்சி கிங்ஸ் அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் வின்ஸ், ஹைதர் அலி, ஷோயப் மாலிக், இமாத் வாசிம் (கேப்டன்), பென் கட்டிங், இர்ஃபான் கான், ஆமீர் யாமின், முகமது உமர், இம்ரான் தாஹிர், ஆகிஃப் ஜாவேத்.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, டேவிட் மில்லர், கைரன் பொல்லார்டு, குஷ்தில் ஷா, கார்லஸ் பிராத்வெயிட், உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது இலியாஸ், ஈசானுல்லா.
முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் அகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவரில் 85 ரன்களை சேர்த்தது. அரைசதம் அடித்த ஷான் மசூத் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய முகமது ரிஸ்வான் சதமடித்தார். 64 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகவில்லை. ரிஸ்வானின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 196 ரன்களை குவித்தது முல்தான் சுல்தான்ஸ் அணி.
197 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 14 பந்தில் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 34 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்தார் ஜேம்ஸ் வின்ஸ்.
ஹைதர் அலி(12), ஷோயப் மாலிக்(13) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டன் இமாத் வாசிம் நிலைத்து நின்று ஆடினார். கடைசி ஓவரில் கராச்சி கிங்ஸ் அணிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய அப்பாஸ் அஃப்ரிடி முதல் பந்தை நோ பாலாக வீச, அந்த பந்தில் சிக்ஸர் அடித்தார் இமாத் வாசிம். எனவே பந்தே வீசாமல் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு 7 ரன்கள் கிடைத்தது. அதற்கு வீசப்பட்ட ரீபாலில் ஒரு ரன் அடித்தார் இமாத் வாசிம். எனவே ஒரு பந்தில் 8 ரன்கள் கிடைத்தது. 2வது பந்தை அப்பாஸ் வைடாக வீச, அதற்கு வீசப்பட்ட ரீபாலில் பென் கட்டிங் சிக்ஸர் அடிக்க, முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு முதல் 2 பந்தில் 15 ரன்கள் கிடைத்தது.
கடைசி 4 பந்தில் வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 3வது பந்தை வைடாக வீசிய அப்பாஸ் அஃப்ரிடி, அதற்கு வீசப்பட்ட ரீபாலில் ரன் கொடுக்காமல், 4வது பந்தில் பென் கட்டிங்கை வீழ்த்த, கராச்சி கிங்ஸ் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட, கராச்சி அணி 2 ரன் மட்டுமே அடித்து, 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.