பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை செம கிழி கிழித்த முகமது ஆமீர்..!

By karthikeyan VFirst Published May 21, 2021, 3:40 PM IST
Highlights

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர்.
 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். வீரர்களை தேர்வு செய்வது, நாட்டுக்காக ஆடிய மேட்ச் வின்னர்களை கையாள்வது, உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை கையாள்வது ஆகியவற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் நடுநிலையானதாகவோ நேர்மையானதாகவோ இல்லை என்பது குற்றச்சாட்டு.

மேலும், வீரர்களை அணுகுவதில் ஒருதலைபட்சமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறது என்ற விமர்சனமும் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்குரிய மரியாதை கொடுக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்ததாக ஏற்கனவே கூறியிருந்த முகமது ஆமீர், தற்போது மேலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து பேசிய முகமது ஆமீர், நாட்டுக்காக பல போட்டிகளை ஜெயித்து கொடுத்த மேட்ச் வின்னர்களிடம் புள்ளி விவரங்களை பார்க்கக்கூடாது. அந்த மாதிரியான மேட்ச் வின்னர்களின் புள்ளி விவரங்களை பார்ப்பதைவிட, அவர்களது திறமை, அவர்கள் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட்டில் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றிற்கு மதிப்பளித்து, அவர்கள் சரியாக ஆடாத சமயத்தில் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி மீண்டும் தேசிய அணியில் இடம்பெறும் வாய்ப்பை பெறுங்கள் என்று அணி நிர்வாகம் அறிவுறுத்தப்பட வேண்டும். 

அதைவிடுத்து மேட்ச் வின்னர்களாகவே இருந்தாலும், வெறும் புள்ளிவிவரங்களையும் சில போட்டிகளில் சரியாக ஆடாததற்காகவும் உங்கள் கெரியரே முடிந்தது. இனிமேல் உங்களுக்கு அணியில் வாய்ப்பில்லை என்று ஓரங்கட்டுகின்றனர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விளாசியுள்ளார் முகமது ஆமீர்.
 

click me!