என் தூக்கத்தை கெடுத்த பவுலர் அவர்.! மிகப்பெரிய சாம்பியன்.. இந்திய லெஜண்ட் கிரிக்கெட்டருக்கு சங்கக்கரா புகழாரம்

By karthikeyan VFirst Published May 21, 2021, 3:02 PM IST
Highlights

தனது பலநாள் தூக்கத்தை கெடுத்த பவுலர் அனில் கும்ப்ளே என்றும், அவர் இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே சாம்பியன் கிரிக்கெட்டர் என்றும் குமார் சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பவுலர் கும்ப்ளே தான். 1999ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார்.

ஒரு பவுலராக மட்டுமல்லாது கேப்டனாகவும் இந்திய அணிக்கு அளப்பரிய பங்காற்றியவர் அனில் கும்ப்ளே. நாட்டுக்காக ஆடுவதை தவமாய் நினைத்து தனது கெரியர் முழுவதும் ஆடிய கும்ப்ளே, இந்திய அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், இக்கட்டான சூழல்களில் எல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தவர்.

அனில் கும்ப்ளே தனது கிரிக்கெட் கெரியரில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் பலருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துள்ளார். அப்படி கும்ப்ளேவை எதிர்கொள்ள திணறிய லெஜண்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் குமார் சங்கக்கரா. பலநாள் தனது தூக்கத்தை கெடுத்த பவுலர் கும்ப்ளே என்று சங்கக்கரா கூறியுள்ளார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் அனில் கும்ப்ளேவை கௌரவப்படுத்தி வெளியிட்ட வீடியோவில் பேசிய குமார் சங்கக்கரா, அனில் கும்ப்ளே பலநாள் என் தூக்கத்தை கெடுத்துள்ளார். அவர் மற்ற லெக் ஸ்பின்னர்களை போன்றவர் அல்ல. உயரமான, ஹை ஆர்ம் ஆக்‌ஷனை கொண்ட பவுலர். நல்ல வேகத்தில் நேராக துல்லியமாக வீசக்கூடிய பவுலர். கும்ப்ளேவின் பவுலிங்கில் ரன் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. வெற்றி வேட்கை கொண்ட வீரர். இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலேயே அவர் மிகப்பெரிய சாம்பியன் என்று சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார்.

click me!