ஷேன் வார்ன் கருத்துக்குலாம் நான் பதில் சொல்லவே விரும்பல - கெத்தா பேசிய மிட்செல் ஸ்டார்க்

By karthikeyan VFirst Published Jan 29, 2022, 9:09 PM IST
Highlights

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் தன்னை விமர்சனம் செய்த ஷேன் வார்னுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துவிட்டார்.
 

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க். 2010ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிவரும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு இப்போது வயது 31. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 66 டெஸ்ட், 99 ஒருநாள் மற்றும் 48 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான மிட்செல் ஸ்டார்க், 2015ம் ஆண்டு மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த உலக கோப்பையை வெல்ல மிட்செல் ஸ்டார்க் முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிவரும் மிட்செல் ஸ்டார்க், அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் ஆடி 19 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அந்த தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடரில் வெறும் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், டி20 உலக கோப்பை ஃபைனலில் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 60 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கு முன்பாக முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக ஜெய் ரிச்சர்ட்ஸன் விளையாட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கருத்து கூறியிருந்தார்.

2021ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்திரேலிய வீரர் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்ற நிலையில், ஷேன் வார்ன் அவரைப் பற்றி பேசிய கருத்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மிட்செல் ஸ்டார்க், கடந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. நான் நினைத்தது மாதிரி என்னால் பந்துவீச முடியவில்லை. சில சமயங்களில் கிரிக்கெட் இனிமேல் ஆடவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். ஷேன் வார்னின் விமர்சனம் பற்றி பேச நான் விரும்பவில்லை. அவரது கருத்தை கூற அவருக்கு உரிமை இருக்கிறது.  நான் விரும்பும் விதத்தில் நான் விளையாட போகிறேன். திறமையான வீரர்களுடன் இணைந்து விளையாடுகிறேன். எனது குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு உள்ளது.  எனவே என் வட்டத்துக்கு வெளியே கூறப்படும் கருத்து பற்றி எனக்கு கவலையில்லை என்று மிட்செல் ஸ்டார்க் கூறினார்.
 

click me!