PSL: குஷ்தில் ஷாவின் ஹீரோயிக் கேமியோ; நாலே பந்தில் தரமான சம்பவம்!கடினஇலக்கை அடித்து முல்தான் சுல்தான்ஸ் வெற்றி

By karthikeyan VFirst Published Jan 29, 2022, 8:01 PM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் அணிக்கு எதிரான போட்டியில் 207 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரின் 4வது பந்தில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கராச்சியில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, லாகூர் காலண்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

லாகூர் காலண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 35 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்தார். ஷாஃபிக், காம்ரான் குலாம், ஹஃபீஸ், டேவிட் வீஸ் மற்றும் ரஷீத் கான் ஆகிய அனைவருமே சிறு சிறு பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 206 ரன்கள் அடித்தது லாகூர் காலண்டர்ஸ் அணி.

207 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 150 ரன்களை குவித்தது. ஷான் மசூத் 50 பந்தில் 83 ரன்களை குவித்தார். முகமது ரிஸ்வான் 42 பந்தில் 69 ரன்களை குவித்தார். ஷான் மசூத்தும் முகமது ரிஸ்வானும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தபோதிலும் அதன்பின்னர் சொஹைப் மக்சூத் (20), ரிலீ ரூசோ (5), டிம் டேவிட் (1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19 ஓவரில் 191 ரன்களை அடித்த முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

ஹாரிஸ் ராஃப் வீசிய கடைசி ஓவரை குஷ்தில் ஷா எதிர்கொண்டார். முதல் 3 பந்தில் பவுண்டரி அடித்த குஷ்தில் ஷா, 4வது பந்தில் சிக்ஸர் அடிக்க, 2 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 4 பந்தில் 18 ரன்களை குவித்து ஹீரோயிக் கேமியோ பெர்ஃபாமன்ஸால் வெற்றியை தேடிக்கொடுத்தார் குஷ்தில் ஷா.
 

click me!