
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, இந்த சீசனின் லீக் போட்டிகள் முழுவதுமாகவே மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டுவருகிறது.
அனைத்து அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் உட்பட ஐபிஎல்லில் தொடர்புடைய அனைவரும் பயோ பபுளில் உள்ளனர். ஆனால் அதையும் மீறி டெல்லி கேபிடள்ஸ் ஃபிசியோ பாட்ரிக் ஃபர்ஹாட்டிற்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருந்தது.
அதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கைகுலுக்க மற்றும் கட்டிப்பிடிக்கவெல்லாம் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் டெல்லி கேபிடள்ஸ் அணியில் மற்றொரு வீரர் ஒருவருக்கும், சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியிருக்கிறது.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு வீரருக்கு கொரோனா என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்ததே தவிர எந்த வீரர் என்று முன்பு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அந்த வீரர் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. மிட்செல் மார்ஷுக்குத்தான் கொரோனா பரிசோதனையில் அறிகுறிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் ஒரு சப்போர்ட் ஸ்டாஃபிற்கும் கொரோனா அறிகுறி உள்ளது. எனவே அவர்கள் டெல்லி கேபிடள்ஸ் அணி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி அணியின் ஃபிசியோ பாட்ரிக், மிட்செல் மார்ஷ் மற்றும் இன்னொருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது. மிட்செல் மார்ஷ் அண்மையில் தான் டெல்லி கேபிடள்ஸ் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.