ஸ்மித்தை தட்டி தூக்க பக்கா பிளான்.. எங்க பசங்களோட ஆட்டத்தை பார்க்கத்தானே போறீங்க.. மிஸ்பா உல் ஹக் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 19, 2019, 5:47 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 21ம் தேதி தொடங்குகிறது. 
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிக மிக கடினமான காரியம். அதிலும் பாகிஸ்தான் அணி வீழ்த்துவது என்பது அசாத்தியமான காரியம் தான். ஆனாலும் புதிய தேர்வுக்குழு தலைவராகவும் தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றுள்ள மிஸ்பா உல் ஹக், ஆஸ்திரேலியாவில் சாதிக்கும் முனைப்பில் உள்ளார். 

பாகிஸ்தான் அணி கேப்டனை மாற்றியதுடன், முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை அணியிலிருந்தே தூக்கியதுடன் இளம் வீரர்களை இறக்கியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தியபோது ஸ்மித்தும் வார்னரும் தடையில் இருந்தனர். அந்த கேப்பில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டது. இந்திய அணி வலுவான டாப் அணிதான் என்றாலும், ஸ்மித்தும் வார்னரும் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத்தான் இந்திய அணி வீழ்த்தியது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். 

அந்தவகையில் பார்க்கப்போனால், இப்போது அவர்கள் இருவருமே அணியில் உள்ளனர். அவர்களை மீறி ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் வீழ்த்துவது மிக கடினம். அதிலும் டாப் ஃபார்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே பாகிஸ்தானுக்கு பெரிய சவால். தடை முடிந்து வந்த ஸ்மித், ஆஷஸ் தொடரில் 110.57 என்ற சராசரியுடன் 774 ரன்களை குவித்து, ஆஷஸ் டிராபியை ஆஸ்திரேலியா தக்கவைக்க காரணமாக திகழ்ந்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான வித்தியாசமாக ஸ்மித் திகழ்ந்தார். 

எனவே ஸ்மித்தை விரைவில் வீழ்த்துவது ரொம்ப முக்கியம். அதை உணர்ந்த பாகிஸ்தான் அணி, அவரை வீழ்த்துவதற்கு பக்காவா திட்டம்போட்டு வைத்துள்ளதாக பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார். 

இதுகுறித்து பேசியுள்ள மிஸ்பா உல் ஹக், ஸ்மித் மட்டுமல்ல, மிகத்திறமையான எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, ஒருசில ஏரியாக்களில் பந்துவீசினால் அவர்களும் திணறவே செய்வார்கள். பேட்ஸ்மேனிலிருந்து 6-8 மீட்டர் தொலைவில் பந்துவீசினால் ஆடுவது கடினம் தான். பேட்ஸ்மேன் திணறும் ஏரியாவில் தொடர்ச்சியாக பந்துகளை வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த லைன் அண்ட் லெந்த்தை தவறவிட்டால், அடித்துவிடுவார்கள். 

அதனால் துல்லியமாகவும் தொடர்ச்சியாகவும் இடைவிடாமல் சரியான ஏரியாவில் பந்துவீசி நெருக்கடியை அதிகரித்தால், அந்த நெருக்கடியில் ஏதாவது ஒரு தருணத்தில் பேட்ஸ்மேன் தவறு செய்துவிடுவார். எனவே ஸ்மித்துக்கு எங்கு வீச வேண்டும் என்ற சரியான ஏரியாவை கண்டறிந்து திட்டத்தை பக்காவாக வைத்துள்ளோம். பவுலர்கள் அதை சரியாக செயல்படுத்த தீவிர பயிற்சி எடுத்துள்ளனர். அதனால் ஸ்மித்துக்கு எதிரான திட்டத்தை களத்தில் சரியாக செயல்படுத்துவார்கள் என மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

click me!