கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேப்டனாக தனித்துவமான சாதனையை படைத்த இயன் மோர்கன்.. வேற யாராலும் முடியுமாங்குறதே டவுட்டுதான்

By karthikeyan VFirst Published Nov 19, 2019, 5:44 PM IST
Highlights

கிரிக்கெட்டில் இயன் மோர்கன் ஒரு கேப்டனாக தனித்துவமான பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார். 
 

ஒருநாள் போட்டி, டி20 போட்டி, டி10 போட்டி என அவர் கேப்டனாக இருக்கும் மூன்றுவிதமான போட்டிகளிலும் அவரது அணி ஆடிய போட்டி டையில் முடிந்துள்ளது. 

இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை அண்மையில் வென்றது. இந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. உச்சகட்ட பரபரப்பான இந்த போட்டி டையில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், ஐசிசி விதிப்படி, அதிக பவுண்டரி அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. 

அதன்பின்னர் இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி ஆடிய டி20 போட்டியும் டையில் முடிந்தது. அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிதான். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றன. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி டை ஆனது. அதன்பின்னர் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி வென்றது. 

இவ்வாறு ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வடிவங்களில் இயன் மோர்கன் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி ஆடிய போட்டிகள் டை ஆகியிருந்த நிலையில், தற்போது மோர்கன் கேப்டனாக இருக்கும் அணி, டி10 போட்டியிலும் டை முடிவை பெற்றது. அபுதாபி டி10 லீக்கில் டெல்லி புல்ஸ் அணியின் கேப்டனாக மோர்கன் உள்ளார். 

பங்களா டைகர்ஸ் மற்றும் டெல்லி புல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டைகர்ஸ் அணி 10 ஓவரில் 108 ரன்கள் அடித்தது. இதையடுத்து 109 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய புல்ஸ் அணியும் சரியாக 108 ரன்களை அடித்ததை அடுத்து இந்த போட்டி டை ஆனது. 

இதன்மூலம் ஒருநாள், டி20, டி10 ஆகிய மூன்று வடிவங்களிலும் டை முடிவை பெற்ற கேப்டன் என்ற தனித்துவமான பெருமையை மோர்கன் பெற்றுள்ளார். 
 

click me!