மிஸ்பா உல் ஹக்கிற்கு இரட்டை பதவி.. முதன்முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்த முரட்டு சம்பவம்

By karthikeyan VFirst Published Sep 5, 2019, 10:23 AM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தரின் பதவிக்காலத்தில், பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியது. 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதோடு, டி20 தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் படுமோசமாக சொதப்பியதுடன், உலக கோப்பையிலும் சொதப்பி லீக் சுற்றுடன் வெளியேறியது. 

உலக கோப்பையுடன் மிக்கி ஆர்தர் மற்றும் மற்ற பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களின் பதவிக்காலத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீட்டிக்க விரும்பவில்லை. இதையடுத்து புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் மிஸ்பா உல் ஹக். இவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு மோசின் கான் மற்றும் டீன் ஜோன்ஸ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. ஆனால் மோசின் கான் வயது அதிகமானவர் என்பதாலும் டீன் ஜோன்ஸ் வெளிநாட்டுக்காரர் என்பதாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 

அதனால் மிஸ்பாவிற்கான கதவு எளிதாக திறந்தது. தலைமை பயிற்சியாளராக மட்டுமல்லாமல் தேர்வுக்குழு தலைவராகவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தேர்வில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளரே தேர்வுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டது இதுதான் முதன்முறை.

பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும் சிறந்த ஃபாஸ்ட் பவுலருமான வக்கார் யூனிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். வக்கார் யூனிஸ் ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். 

click me!