ஒரே தொடரில் உச்சத்துக்கு போன பும்ரா.. 39 வருஷத்துக்கு பிறகு பும்ரா செய்த முரட்டு சம்பவம்

By karthikeyan VFirst Published Sep 3, 2019, 5:05 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸை 100 ரன்களில் சுருட்ட காரணமாக திகழ்ந்தார். 

இந்திய அணிக்கு பும்ரா வந்தபிறகு, பவுலிங்கில் தலைசிறந்த அணியாக இந்திய அணி மாறியுள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அசத்த, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் மிரட்டுகின்றனர். 

ஆக மொத்தத்தில் இந்திய அணியின் பவுலிங்கே பும்ராவை மையமாக வைத்துத்தான் இயங்குகிறது. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனில் துல்லியமான மற்றும் நேர்த்தியான பவுலிங்கின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிடுகிறார் பும்ரா. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸை 100 ரன்களில் சுருட்ட காரணமாக திகழ்ந்தார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

தனது அபாரமான பவுலிங்கால் ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் தனது கெரியரின் பெஸ்ட் இடத்தை பிடித்துள்ளார். பாட் கம்மின்ஸ், ரபாடா ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 835 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். 

இதன்மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு 835 புள்ளிகளை கடந்த இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். 1980ல் கபில் தேவ் 877 டெஸ்ட் புள்ளிகளை பெற்றிருக்கிறார். அதன்பின்னர் 39 ஆண்டுகளாக எந்த இந்திய ஃபாஸ்ட் பவுலரும் 835 புள்ளிகளை பெற்றதில்லை. பும்ரா தான் 835 என்ற நம்பரை எட்டியுள்ளார். கபில் தேவை முந்துகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

click me!