ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் ஒரு வீரர்.. மைக் ஹசியின் சுவாரஸ்யமான தேர்வு

By karthikeyan VFirst Published Sep 27, 2019, 3:58 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மைக் ஹசி, மூன்றுவிதமான போட்டிகளிலும் எந்த பேட்ஸ்மேன் ஆடுவதை பார்க்க தனக்கு பிடிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மைக் ஹசி, அபாரமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது சிறந்த ஃபீல்டரும் கூட. 

ஆஸ்திரேலிய அணியில் 2004ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை மைக் ஹசி ஆடினார். 2013ம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். சூழலுக்கு ஏற்ப ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர் மைக் ஹசி. தொடக்க வீரராகவும் ஜொலிக்கக்கூடியவர், மிடில் ஆர்டரிலும் அசத்தக்கூடியவர். அவர் ஆடும் அணி அவரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். 

185 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5442 ரன்களையும் 79 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6235 ரன்களையும் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன்களாக திகழ்ந்த ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஆடியவர் மைக் ஹசி. பாண்டிங் கேப்டன்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணியிலும் தோனியின் கேப்டன்சியின் கீழ் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியிலும் ஆடியுள்ளார். 

ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான மைக் ஹசி, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு விதமான கிரிக்கெட் போட்டியிலும் அவர் பார்க்க விரும்பும் வீரர்களின் ஆட்டம் என்றால், அது எந்தெந்த வீரர்கள் என்ற கேள்விக்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரயன் லாராவின் பேட்டிங்கையும் ஒருநாள் போட்டிகளில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பவனின் ஆட்டத்தையும் டி20 போட்டிகளில் டிவில்லியர்ஸின் அதிரடியையும் காண விரும்புவதாக மைக் ஹசி கூறினார். 
 

click me!