#ENGvsIND இந்திய அணி மறுபடியும் அவரை எடுக்காம தப்பு பண்ணிட்டாங்க..! இங்கிலாந்து அதுல செம உஷார் - மைக்கேல் வான்

By karthikeyan VFirst Published Aug 12, 2021, 9:37 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தேர்வில் தவறு செய்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து கூறியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, ரோஹித்தும் ராகுலும் அமைத்து கொடுத்த அடித்தளத்தை பின்பற்றி பெரிய ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. முதல் டெஸ்ட்டில் ஆடிய ஷர்துல் தாகூர் காயத்தால் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் ஆடாத, அணியின் சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் இந்த போட்டியிலாவது ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

எந்தவிதமான கண்டிஷனிலும் எப்பேர்ப்பட்ட சூழலிலும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பின்னரான அஷ்வினை, முதல் டெஸ்ட்டில் எடுக்காதது கடும் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கு உள்ளானது. அஷ்வினை எடுக்காதது இங்கிலாந்து அணிக்குத்தான் சாதகம் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

அஷ்வின் ஸ்பின் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கும் நன்றாக ஆடக்கூடியவர். எனவே 2வது டெஸ்ட்டிலாவது அவர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஷ்வின் இந்த போட்டியிலும் எடுக்கப்படவில்லை.

அஷ்வினை எடுக்காதது தவறான முடிவு என்று மைக்கேல் வான் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து மைக்கேல் வான் பதிவிட்ட டுவீட்டில், இங்கிலாந்து சரியான அணியை தேர்வு செய்துள்ளது. ஆனால் இந்திய அணி தேர்வு தவறானது. அஷ்வின் கண்டிப்பாக ஆடியிருக்க வேண்டும். அவர் தரமான பவுலர் மட்டுமல்லாது, நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடியவர். அவர் அனைத்துவிதமான கண்டிஷனிலும் அருமையாக வீசக்கூடியவர். அவருக்கான நாளில் விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்துவிடுவார் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

டாஸ் போட்ட பின்னர் அஷ்வினை எடுக்காதது குறித்து விளக்கமளித்த கேப்டன் கோலி, ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அணி தேர்வு செய்யப்பட்டதாகவும், 4 ஃபாஸ்ட் பவுலர்கள் தேவை என்பதால் தான் அஷ்வினை சேர்க்காமல் இஷாந்த் சர்மாவை சேர்த்ததாகவும் கூறினார் கோலி.
 

click me!