IRE vs NZ: மைக்கேல் பிரேஸ்வெல்லின் காட்டடி சதத்தால் முதல் ODIயில் நியூசிலாந்து த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Jul 11, 2022, 3:31 PM IST
Highlights

மைக்கேல் பிரேஸ்வெல்லின் அபாரமான சதத்தால் 301 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரின் 5வது பந்தில் அடித்து நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங்(5) மற்றும் பால்பிர்னி(9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஆண்டி மெக்பிரைன் 39 ரன்கள் அடித்தார்.  4ம் வரிசையில் இறங்கிய ஹாரி டெக்டார் ஒருமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆட, மறுமுனையில் காம்ஃபெர்(43), டக்கர் (26) ஆகிய இருவரும் ஓரளவிற்கு நல்ல பங்களிப்பு செய்தனர். 

இதையும் படிங்க - 2022 டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த அணிதான் வெல்லும்..! ஷாஹித் அஃப்ரிடி ஆருடம்

அபாரமாக ஆடிய டெக்டார் சதமடித்தார். டெக்டார் 113 ரன்களை குவித்தார். டெக்டாரின் சதத்தால் 50 ஓவரில் 300 ரன்களை குவித்த அயர்லாந்து அணி, 301 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது.

301 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபேபியன் ஆலன்(6), வில் யங்(1), கேப்டன் டாம் லேதம்(23), ஹென்ரி நிகோல்ஸ்(7) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். க்ளென் ஃபிலிப்ஸ் 38 ரன்கள் அடித்தார்.

டாப் 6 வீரர்களில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டோம் என நினைத்த அயர்லாந்து அணிக்கு, 7ம் வரிசையில் இறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 7ம் வரிசையில் இறங்கி அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதமடித்தார் பிரேஸ்வெல். சதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடி, கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

இதையும் படிங்க - 2022 T20 WC: இந்த தடவை இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு ஈசியா இருக்காது! அக்தர் அதிரடி

கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். பிரேஸ்வெல்லின் அதிரடி சதத்தால் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
 

click me!