#ENGvsIND பயிற்சியில் ஓபனிங் பேட்ஸ்மேனின் பின் மண்டையில் பலத்த அடி..! கடைசி நேரத்தில் மாறிய காட்சிகள்

By karthikeyan VFirst Published Aug 2, 2021, 7:20 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பயிற்சியின்போது இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வாலின் பின் மண்டையில் அடிபட்டதால், அவர் கன்கஷனில் இருக்கிறார். 
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை வீரரான ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் விலகினர். 

இதையடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷாவும் சூர்யகுமார் யாதவும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்கின்றனர். அவர்கள் இங்கிலாந்துக்கு சென்றதும் குவாரண்டினை முடித்துவிட்டுத்தான் இந்திய அணியுடன் இணைவார்கள். அவர்கள் இருவரும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஆடமுடியாது. 

ஷுப்மன் கில் காயத்தை தொடர்ந்து, ரோஹித் சர்மாவுடன் மயன்க் அகர்வால் தான் தொடக்க வீரராக இறங்கப்போகிறார் என்பது முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது. அணியில் இருக்கும் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் ஆடவைக்கும் திட்டத்தில் இருந்தது இந்திய அணி.

இந்நிலையில், போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் காட்சிகள் மாறியுள்ளன. பயிற்சியின்போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வாலுக்கு முகமது சிராஜின் பந்தில் பின் மண்டையில் அடிபட்டது. சிராஜ் வீசிய பந்து மயன்க் அகர்வாலின் ஹெல்மெட்டின் பின்பகுதியில் பலமாக தாக்கியது. இதையடுத்து உடனடியாக அவரை பரிசோதித்த ஃபிசியோ நிதின் படேல், அவரை கன்கஷனுக்கு அழைத்து சென்றார்.

அதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மயன்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். எனவே ரோஹித்துடன் கேஎல் ராகுல் தொடக்க வீரராக இறங்குவார். மிடில் ஆர்டரில் இறங்குவதாக இருந்த ராகுல் தொடக்க வீரராக இறங்குவதால், ஹனுமா விஹாரிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அணி, ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்து, ஏற்கனவே ஒரு திட்டத்தில் இருந்திருக்கும். கடைசி நேரத்தில் மயன்க் அகர்வால் காயமடைந்ததால், இந்திய அணியின் திட்டம் அனைத்தும் மாறிவிட்டது.
 

click me!