
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூட்டை பின்னுக்குத்தள்ளி மார்னஸ் லபுஷேன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஜோ ரூட் இந்த ஆண்டு முழுவதுமே மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடியுள்ளார். அவர் இந்த ஆண்டில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1630 ரன்களை குவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய துணைக்கண்ட நாடுகளில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி சதங்களை விளாசினார். இலங்கையில் இரட்டைசதம் அடித்தார். இந்த ஆண்டு ஜோ ரூட்டுக்கு சிறப்பான ஆண்டாக இருந்தாலும், அவர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு படுமோசமானதாக அமைந்தது.
ஜோ ரூட்டின் கேப்டன்சி ஏற்கனவே கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெஸ்ட் தரவரிசையில் அவரது முதலிடமும் இப்போது பறிபோனது. ஆஷஸ் தொடரில் ரூட் நன்றாக ஆடினாலும், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமும், 2வது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்ததன் விளைவாக, 912 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்னஸ் லபுஷேன்.
897 புள்ளிகளுடன் ஜோ ரூட் இரண்டாமிடத்திற்கு பின் தங்கினார். 3, 4 மற்றும் 5ம் இடங்களில் முறையே ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் உள்ளனர். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக திணறிவருவதால் அவர் 7ம் இடத்தில் உள்ளார். விராட் கோலி அண்மைக்காலங்களில் பெற்ற மோசமான இடம் இது.