மார்க் உட்டின் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்த ரோஹித், ராகுல்! சிக்கலில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவாரா கோலி?

By karthikeyan VFirst Published Aug 15, 2021, 5:07 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் ரோஹித்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ரோஹித் சர்மா(83) மற்றும் கேஎல் ராகுல்(129) ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங் மற்றும் கோலி(42), ஜடேஜா(40), ரிஷப் பண்ட் ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால்(180*) முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததோடு, 3ம் நாள் ஆட்டம் முடிந்தது.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் தொடங்கியது இந்திய அணி. நல்ல இன்னிங்ஸை ஆடி, மீண்டுமொரு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்புடன் களத்திற்கு வந்தனர் ரோஹித்தும் ராகுலும்.

9 ஓவர்கள் இருவரும் தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், மார்க் உட் வீசிய 10வது ஓவரில் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் கேஎல் ராகுல். முதல் இன்னிங்ஸில் சதமடித்த கேஎல் ராகுல், இந்த இன்னிங்ஸில் 5 ரன்னுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து மார்க் உட், அவரது அடுத்த ஓவரில்(12வது ஓவர்) ரோஹித்தை பக்காவாக பிளான் செய்து வீழ்த்தினார். ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் ரோஹித் சர்மா கண்டிப்பாக புல் ஷாட் ஆடுவார் என்பதால், டீப் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார் மார்க் உட். 12வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸர் விளாசிய ரோஹித், அந்த ஓவரின் கடைசி பந்தையும் புல் ஷாட் ஆடமுயன்று மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முக்கியமான இன்னிங்ஸில் நல்ல ஃபார்மில் இருந்த ரோஹித்தும் ராகுலும் விரைவில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கோலியும் புஜாராவும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். கோலியிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் கண்டிப்பாக இந்தியாவுக்குத் தேவை.
 

click me!