மிடில் ஆர்டர் சிக்கலை தீர்க்கப்போவது யார்..? அவங்க 4 பேரில் 2 பேருக்கு கண்டிப்பா அணியில் வாய்ப்பு

By karthikeyan VFirst Published Jul 21, 2019, 10:11 AM IST
Highlights

உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காண்பதில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தீவிரமாக உள்ளது. 

இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்னை இருந்துவருகிறது. குறிப்பாக நான்காம் வரிசையில் நீடித்துவந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இரண்டு ஆண்டுகாலம் தேடுதல் படலம் நடத்தப்பட்டது. 

ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா ஆகியோர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக கடந்த ஆண்டு ராயுடுவை உறுதி செய்த இந்திய அணி நிர்வாகம், கடைசி நேரத்தில் உலக கோப்பை தொடரில் அவரை கழட்டிவிட்டது. 

உலக கோப்பையை மனதில்வைத்து 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேடுதல் படலம் வீணானது. உலக கோப்பையிலும் மிடில் ஆர்டர் பிரச்னை எதிரொலிக்க, அரையிறுதியில் டாப் ஆர்டர்கள் சொதப்பியதை அடுத்து மிடில் ஆர்டர்களும் கைவிட்டதால் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டது. 2 ஆண்டுகள் தேடியும் சரியான வீரரை தேர்வு செய்யாதது அணி நிர்வாகத்தின் தவறுதான். 

இந்நிலையில், உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காண்பதில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தீவிரமாக உள்ளது. அந்தவகையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ள நிலையில், இந்த தொடரிலிருந்தே நான்காம் வரிசை வீரரையும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் உறுதி செய்யும் தீவிரத்தில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உள்ளது. 

தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாததை உறுதி செய்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. அவர் நான்காம் வரிசையில் இறக்கப்படுகிறாரா அல்லது 5, 6ம் வரிசையில் ஒன்றில் இறக்கப்படுகிறாரா என்பது தெரியவில்லை. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில், ரஹானே ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் யார் அணியில் எடுக்கப்படுகிறார் என்பது இன்றைக்கு தெரியும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்திற்கு பின்னர் இந்திய அணி அறிவிக்கப்படும். 

வெஸ்ட் இண்டீஸில் இந்தியா ஏ அணியும் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இந்த தொடரில் இந்தியா ஏ அணியில் ஆடும் மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் அபாரமாக ஆடிவருகின்றனர். 

மனீஷ் பாண்டே 87 பந்துகளில் ஒரு சதம் அடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். 19 வயதே ஆன ஷுப்மன் கில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அணியின் நலனை கருத்தில்கொண்டு சூழலுக்கு ஏற்றவாறு ஆடி அசத்துகிறார். 19 வயதில் மிகவும் முதிர்ச்சியாக ஆடும் அவரும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான போட்டியில் கடும் போட்டியாளராக திகழ்கிறார். 

மனீஷ் பாண்டே இதுவரை இந்திய அணிக்காக 7 இன்னிங்ஸ்களில் 4ம் வரிசையில் ஆடி ஒரு சதத்துடன் 183 ரன்கள் அடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் 2017ல் இலங்கைக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். அவரும் நன்றாகவே ஆடினார். ஆனாலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். இந்திய அணிக்காக அவர் 6 போட்டிகளில் ஆடி 162 ரன்கள் அடித்துள்ளார். ரஹானே இந்திய அணியில் தொடக்க வீரராக இறங்கி அசத்தியுள்ளார். ஆனால் மிடில் ஆர்டரில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் கூட, நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட முதிர்ச்சியான அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரும் பரிசீலிக்கப்படுவார். 

ஆனால் பெரும்பாலும் ரஹானேவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகிய இருவருக்கும் 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 
 

click me!