தூத்துக்குடியைப் பந்தாடிய மதுரை பாந்தர்ஸ் அணி !! டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அபாரம்!!

By Selvanayagam PFirst Published Jul 20, 2019, 11:51 PM IST
Highlights

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது லீக் ஆட்டம்  இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சீனிவாசன் மற்றும் வில்கின்சன் விக்டர் ஆகியோர் களமிறங்கினர். இதில் வில்கின்சன் விக்டர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த சீனிவாசன் மற்றும் சுப்பிரமணிய சிவா பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சுப்பிரமணிய சிவா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அதற்கு பின் அபிஷேக் 4 ரன்னிலும், ஷூபம் மேத்தா ரன் எதுவும் எடுக்காமலும், அரைசதம் அடித்த சீனிவாசன் 55 ரன்களிலும், கார்த்திகேயன் 4 ரன்னிலும், வசந்த் சரவணன் 11 ரன்னிலும், கணேஷ் மூர்த்தி 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. கடைசியில் சத்யராஜ் 9 ரன்னுடனும், பூபாலன் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் ஆர்.மிதுன் மற்றும் கிரண் ஆகாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில், அருண் கார்த்திக் மற்றும் சரத் ராஜ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியான துவக்கம் தந்த இந்த ஜோடியில் கேப்டன் அருண் கார்த்திக் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். 

அதிரடி காட்டிக்கொண்டிருந்த இந்த ஜோடியில் சரத் ராஜ் 33(21) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நிலேஷ் சுப்ரமணியத்துடன், அருண் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அருண் கார்த்திக் 65(42) ரன்களும், நிலேஷ் சுப்ரமணியன் 9(11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 12.2 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 128 ரன்கள் எடுத்தது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் சார்பில் கணேஷ் மூர்த்தி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

click me!