லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகனஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி முடிந்து தற்போது குவாலிஃபையர் போட்டி தொடங்கியுள்ளது. இதன் முதல் குவாலிஃபையர் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லைகா கோவை கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
இதில், தொடக்க வீரர்களான சுஜய் 12 ரன்னிலும், சுரேஷ் குமார் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தார். சச்சின் 70 ரன்கள் சேர்த்தார். முகிலேஷ் 44 ரன்கள் சேர்க்கவே, அடுத்து வந்த மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணி 193 ரன்கள் எடுத்தது.
ஜெய் தோனி, ஜெய் ஜெய் தோனி; 77 அடி உயர கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்!
பின்னர், கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர்களான விமல் குமார் 1 ரன்னிலும், சிவம் சிங் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூபதி குமார் 25 ரன்கள் எடுக்க, கேப்டன் பாபா இந்திரஜித் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆதித்யா கணேஷ் 5, கிஷோர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இறுதியாக சரத்குமார் மற்றும் மதிவாணன் மட்டுமே கடைசி வரை போராடினர். சரத்குமார் 26 பந்துகளில் 8 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
The knock that made even the opponents clap👏👏🏏💥💪🏼 pic.twitter.com/juXnXCApvg
— TNPL (@TNPremierLeague)
வரும் 10ஆம் தேதி நடக்கும் 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடுகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும்.