
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இதில், அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடினார். தொடக்கம் முதலே ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். மேலும், இந்த சீசனில் 2ஆவது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.
டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 75 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு பிறகு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா, கேப்டன் கேஎல் ராகுலிடம் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, பதிலுக்கு கேஎல் ராகுல் ஒன்றுமே பேச முடியாத நிலையில் நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.