ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே சில வீரர்கள் ஐபிஎல் தொடரிலிந்து விலகிய சம்பவம் ஒவ்வொரு அணிக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடங்குவற்கு முன்னதாகவே சில வீரர்கள் ஒவ்வொரு அணியிலிருந்தும் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணத்திற்காகவும் விலகியுள்ளனர். அவர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க…
ஹாரி ப்ரூக் (டெல்லி கேபிடல்ஸ்):
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.4 கோடிக்காக ஏலம் எடுக்கப்பட்டவர் ஹாரி ப்ரூக். கடந்த சீசனில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய நிலையில் டெல்லி அணி அவரை ஏலம் எடுத்தது. கடந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் தான் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த ப்ரூக், தனது பாட்டியின் மறைவைத் தொடர்ந்து இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.
முகமது ஷமி (குஜராத் டைட்டன்ஸ்):
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இடம் பெற்று சிறப்பாக விளையாடியவர் முகமது ஷமி. இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். மேலும், உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய நிலையில் அவருக்கு ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது. அதன் பிறகு எந்த தொடரிலும் பங்கேற்காமல் இருந்த ஷமி அண்மையில் குதிகால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக உடல் தகுதி எட்டாத நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான் ராயல்ஸ்):
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று 17 போட்டிகளில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா 19 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். இதையடுத்து கடந்த சீசனில் இடம் பெறவில்லை. இந்த சீசனில் அண்மையில் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில், இந்த தொடரிலிருந்தும் விலகியிருக்கிறார்.
மார்க் வுட் (லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்):
இந்த ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், வேலைப்பளுவை குறைக்கும் வகையில் இந்த தொடரிலிருந்து விலகியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு லக்னோ அணியில் ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், முழங்கை காயம் காரணமாக அவர் அந்த தொடரில் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு நடந்த 4 போட்டிகளில் இடம் பெற்று 11 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப் ரூ.3 கோடிக்கு அணியில் இடம் பெற்றுள்ளார்.
கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்):
கடந்த ஆண்டு டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று விளையாடியவர் கஸ் அட்கின்சன். இதுவரையில் 9 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்னும் டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து கஸ் அட்கின்சனை விலக்கிக் கொண்டது. கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீரா ரூ.50 லட்சத்திற்கு அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஜேசன் ராய் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்):
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜேசன் ராய் தனிப்பட்ட காரணத்திற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த சீசனில் ரூ.1.5 கோடிக்கு இடம் பெற்று 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்குப் பதிலாக கடந்த சீசனில் டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடியவர் பிலிப் சால்ட். இந்த சீசனில் அவர் ஏலம் எடுக்கப்படாத நிலையில், ஜேசன் ராயிக்கு பதிலாக கொல்கத்தா அணியில் ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டெவோன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்):
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போது ஏற்பட்ட பெருவிரல் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த டெவோன் கான்வே இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
லுங்கி நிகிடி (டெல்லி கேபிடல்ஸ்):
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா வீரர் லுங்கி நிகிடி இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் லுங்கி நிகிடி தக்க வைக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றார். இதுவரையில் 14 போட்டிகளில் விளையாடிய நிகிடி 25 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக சிஎஸ்கே அணியின் மூலமாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார்.
You’ll be missed Jason. But we understand 💜 pic.twitter.com/wrAdafC08G
— KolkataKnightRiders (@KKRiders)