ஒரு மணி நேரத்தில் சதமடிக்கிறேன்னு சொல்லியடித்த கில்லி..! முன்னாள் வீரரை புகழ்ந்து தள்ளிய லக்‌ஷ்மிபதி பாலாஜி

By karthikeyan VFirst Published Jul 31, 2020, 7:03 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழக அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத்தை லக்‌ஷ்மிபதி பாலாஜி விதந்தோதியுள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழக அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத்தை லக்‌ஷ்மிபதி பாலாஜி விதந்தோதியுள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத், தமிழக அணிக்காக 145 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 10,245 ரன்களையும் 144 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 4164 ரன்களையும் குவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய அனுபவம்  கொண்ட சிறந்த பேட்ஸ்மேனான பத்ரிநாத்துக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 

இந்திய அணிக்காக வெறும் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனால் உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியிலும் அபாரமாக ஆடி தனது பல சிறப்பான இன்னிங்ஸ்களின் மூலம் தனது அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றுவிட்ட பத்ரிநாத், கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவருகிறார்.

இந்நிலையில், பத்ரிநாத்தின் பேட்டிங் திறமையை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். வெற்றிக்கான ஃபார்முலா என்ற யூடியூப் நிகழ்ச்சியில் அஷ்வினுடன் பேசிய பாலாஜி, பத்ரிநாத்தை புகழ்ந்துள்ளார். 

பத்ரிநாத் குறித்து பேசிய லக்‌ஷ்மிபதி பாலாஜி, களமிறங்கும் முன்பே நான் சதமடிக்கப்போகிறேன் என்று யாராவது சொல்லி பார்த்திருக்கிறீர்களா? நான் 2005ல் பார்த்தேன். பத்ரிநாத்தை வெவ்வேறு கட்டங்களில் நான் பார்த்திருக்கிறேன். பெஸ்ட் ஸ்பின்னர்கள் எதிரணியில் இருந்த ஒரு போட்டியில், ஒரு மணி நேரத்தில் சதமடிக்கப்போகிறேன் என்று சொல்லியே அடித்தார் பத்ரிநாத். 

நீர்ச்சத்து குறைபாட்டால், மலர் மருத்துவமனையில் பத்ரிநாத்துக்கு மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.  அப்படிப்பட்ட சூழலில் கூட, ஆம்புலன்ஸில் மைதானத்திற்கு வந்து டிரிப்ஸை கழட்டிவிட்டு களத்திற்கு சென்றவர் பத்ரிநாத்.  டெக்னிக்கலாக மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் பத்ரிநாத். அவ்வளவு எளிதில் விக்கெட்டை இழக்கமாட்டார். அதை மறுமுனையில் நின்று நான் பார்த்திருக்கிறேன். ஒரு செசனில் சதமடித்து காட்டினார் என்று பத்ரிநாத்துக்கு பாலாஜி புகழாரம் சூட்டினார். 
 

click me!