#ICCWTC ஃபைனல்: 2 பெரிய தலைகளை அடுத்தடுத்து வீழ்த்திய ஜாமிசன்! இந்திய அணியை சரிவிலிருந்து மீட்பாரா ரிஷப் பண்ட்

By karthikeyan VFirst Published Jun 23, 2021, 4:13 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் கடைசி நாள் ஆட்டத்தில்  இந்திய அணியின் 2 பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார் கைல் ஜாமிசன்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. 2ம் நாள் தான் ஆட்டம் தொடங்கியது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த நிலையில், 4ம் நாள் ஆட்டமும் மழையால் முழுவதுமாக ரத்தானது. இதற்கு இடையிடையேயும் ஆட்டத்தின் ஒருசில செசன்கள் மழையாலும் போதிய வெளிச்சமின்மையாலும் பாதிக்கப்பட்டது.

5ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் எஞ்சிய முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 32 ரன்கள் பின் தங்கிய நிலையில், 5ம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ரிசர்வ் டேவான கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடர்ந்துவருகிறது.

5ம் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த கேப்டன் விராட் கோலியும் புஜாராவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். வேகமாக ஸ்கோர் செய்து 200 ரன்கள் என்கிற அளவில் நியூசிலாந்துக்கு இலக்கு நிர்ணயித்து, அந்த அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெறும் திட்டம் இந்தியாவிடம் இருந்திருக்கும். எனவே கோலி களத்திற்கு வந்தது முதலே ரன் அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது அவரது பேட்டிங்கில் தெரிந்தது.

ஆனால் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்த கைல் ஜாமிசன், இந்த இன்னிங்ஸிலும் கோலியை வீழ்த்தினார். கோலி 13 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, கோலியை வீழ்த்திய அடுத்த ஓவரில் புஜாராவையும் வீழ்த்தினார் கைல் ஜாமிசன். புஜாரா 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரஹானேவும் ரிஷப் பண்ட்டும் இணைந்து ஆடிவருகின்றனர். ரஹானே நல்ல பேட்ஸ்மேன் தான் என்றாலும், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விரைவான இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்றால், அது ரிஷப் பண்ட்டின் கையில் தான் உள்ளது. ரிஷப் பண்ட் இந்திய அணியை கரைசேர்ப்பாரா என்று பார்ப்போம்.
 

click me!