#PSL சவாலான இலக்கை அசால்ட்டா அடித்து ஃபைனலுக்கு முன்னேறிய பெஷாவர் அணி

By karthikeyan VFirst Published Jun 23, 2021, 2:48 PM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 2வது எலிமினேட்டர் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நிர்ணயித்த 175 ரன்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது பெஷாவர் ஸால்மி அணி.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்று முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் நாக் அவுட் போட்டி நேற்று நடந்தது. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில்  டாஸ் வென்ற பெஷாவர் அணி, இஸ்லாமாபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முகமது அக்லக்(7), பிரண்டன் கிங்(18), இஃப்டிகார் அகமது(10), ஷதாப் கான்(15), ஆசிஃப் அலி(8), ஃபஹீம் அஷ்ரஃப்(1) ஆகிய அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் ஹசன் அலி அடித்து ஆடி 16 பந்தில் 45 ரன்களை விளாச, 20 ஓவரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 174 ரன்கள் அடித்தது.

175 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பெஷாவர் அணியின் தொடக்க வீரர் காம்ரான் அக்மல் வெறும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஹஸ்ரதுல்லா ஸேஸாய் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய ஹஸ்ரதுல்லா 44 பந்தில் 66 ரன்களை விளாசினார். அவருடன் இணைந்து அடித்து ஆடிய ஜோனாதன் வெல்ஸும் அரைசதம் அடித்தார். 43 பந்தில் வெல்ஸ் 55 ரன்கள் அடித்தார். ஷோயப் மாலிக்கும் அடித்து ஆடி 10 பந்தில் 32 ரன்களை விளாச, 17வது ஓவரிலேயே 175 ரன்கள் என்ற இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெஷாவர் ஸால்மி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி ஆகிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி வரும் 24ம் தேதி(நாளை) அபுதாபியில் நடக்கிறது.
 

click me!