
ஐபிஎல் 15வது சீசன் நாளையுடன்(மே 29) முடிகிறது. ஃபைனலுக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளும் முன்னேறியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது.
முதல் தகுதிப்போட்டியில் குஜராத்திடம் தோற்ற ராஜஸ்தான் அணி, 2வது தகுதிப்போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் அபாரமாக ஆடி ஃபைனலுக்கு முன்னேறியது.
ஆர்சிபிக்கு எதிரான வாழ்வா சாவா நாக் அவுட் போட்டியில் ஆர்சிபியை 157 ரனக்ளுக்கு கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் அணி. ஒபெட் மெக்காய் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, அஷ்வின், சாஹல் ஆகிய 4 பவுலர்கள் நன்றாக செட் ஆனாலும், 5வது பவுலரான ஒபெட் மெக்காயின் இடம் கேள்விக்குறியாகவே இருந்தது. அவர் அந்தளவிற்கு பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் அவரது இடத்தில் வேறொரு பவுலர் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து ராஜஸ்தான் அணி அவரை இறக்கிவிட்டது.
தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் அபாரமாக பந்துவீசி 23 ரன்கள்மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். அவரது பவுலிங் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.
ஆனால் இந்த போட்டியில் அவர் ஆடும்போது அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்கரா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய குமார் சங்கக்கரா, வெஸ்ட் இண்டீஸில் உள்ள மெக்காயின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் அந்த வருத்தம், சோகத்தையெல்லாம் கடந்து, முழுக்கவனத்தையும் போட்டி மீது செலுத்தி அபாரமாக பந்துவீசினார். அவரது அர்ப்பணிப்பு அபாரமானது என்று சங்கக்கரா தெரிவித்தார்.