சோதனையை சாதனையாக்கிய சைனா மேன்.. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தரமான சாதனை படைத்து ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்த குல்தீப்

By karthikeyan VFirst Published Dec 19, 2019, 12:19 PM IST
Highlights

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்த குல்தீப் யாதவ், மிகப்பெரிய ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 
 

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய குல்தீப்பும் சாஹலும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தனர். இருவரும் உலக கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக சோபிக்கவில்லை. 

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருவரும் இணைந்து ஆடினர். இருவரும் இணைந்து அந்த போட்டியில் 160 ரன்களை வாரி வழங்கினர். இவர்களின் பவுலிங்கை இங்கிலாந்து பவுலர்கள் பொளந்து கட்டிவிட்டனர். அதன்பின்னர் இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து ஆடவில்லை. 

இருவரில் ஒருவர் தான் அணியில் இடம்பெறுகின்றனர். இவர்கள் இருவரில் சாஹல் தான் இந்திய அணியில் இடம்பெற்றுவந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தான் குல்தீப் யாதவ் எடுக்கப்பட்டார். அதுவரை சாஹல் தான் ஆடினார். அதுவும் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹலை நீக்கிவிட்டு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் அணியில் எடுக்கப்பட்டார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் சோபிக்கவில்லை. ஆனால் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஐபிஎல் 2019 சீசனின் பாதியில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் கேகேஆர் அணியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார் குல்தீப். அதன்பின்னர் உலக கோப்பையில் சொதப்பல், அதன்பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காத தவிப்பு என இந்த ஆண்டு முழுவதுமே குல்தீப்பிற்கு சரியாக அமையவில்லை. 

எனவே மீண்டும் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருந்த குல்தீப் யாதவ், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசினார். இந்திய அணி நிர்ணயித்த 388 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப்பும் பூரானும் இணைந்து அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு பயம் காட்டினர். பூரானை 30வது ஓவரில் வீழ்த்தி ஷமி பிரேக் கொடுத்தார். அதே ஓவரில் பொல்லார்டையும் வீழ்த்தினார். 

அதன்பின்னர் 33வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், அந்த ஓவரில் ஷாய் ஹோப், ஹோல்டர் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 

ஏற்கனவே 2017ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது முறையாக ஹாட்ரிக் வீழ்த்தினார். இதன்மூலம் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வாசிம் அக்ரம், சாக்லைன் முஷ்டாக், சமிந்தா வாஸ், டிரெண்ட் போல்ட் ஆகிய லெஜண்ட் பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் குல்தீப் யாதவ். இந்த பட்டியலில் 3 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய லசித் மலிங்கா முதலிடத்தில் உள்ளார். 
 

click me!