
இந்திய அணி முன்னாள் ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கிருஷ்ணப்பா கௌதம் உள்நாட்டு கிரிக்கெட்டில் 394 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2,783 ரன்கள் எடுத்து கர்நாடகாவின் மிகவும் நம்பகமான வீரர்களில் ஒருவராக ஓய்வு பெறுகிறார். அவரது ரஞ்சி டிராபி சாதனையில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும்.
2018-19 சீசனில், கர்நாடகாவின் சையத் முஷ்டாக் அலி டிராபி பட்டத்தை வென்றதில் முக்கியப் பங்காற்றியது கிருஷ்ணப்பா கௌதமின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். அவரது சர்வதேச வாய்ப்பு 2021-ல் அசாதாரண சூழ்நிலைகளில் வந்தது. ஆரம்பத்தில் வலைப் பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்ட கௌதம், கோவிட்-19 காரணமாக பல மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்ட பிறகு, இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவிற்காக அறிமுகமானார். அவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்று, 1/49 என்ற பந்துவீச்சுப் புள்ளிவிவரங்களைப் பதிவு செய்தார்.
ஆரம்ப நாட்களில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு பாணியுடன் இருந்த ஒற்றுமைகள் காரணமாக 'பஜ்ஜி' என்று செல்லப்பெயர் பெற்ற கௌதம் ஐபிஎல்லிலும் ஜொலித்தார். 2018-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடனான அவரது காலம் தனித்து நின்றது. மறைந்த ஷேன் வார்ன் அவரை ஆதரித்து, தனது 'ஐபிஎல் ப்ராஜெக்ட்' என்று குறிப்பிட்டார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் (PBKS), மும்பை இந்தியன்ஸ் (MI), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) என ஐந்து அணிகளுக்காக கெளதம் விளையாடியுள்ளார். 36 போட்டிகளில் விளையாடி, 8.24 என்ற எகானமி ரேட்டில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆலோசகர், வர்ணனை பணி
கௌதம் கடைசியாக டிசம்பர் 2023-ல் கர்நாடகாவிற்காக ஒரு போட்டி ஆட்டத்தில் விளையாடினார். ஆனால் மகாராஜா டி20 லீக்கில் தொடர்ந்து பங்கேற்றார். இருப்பினும், தேர்வாளர்கள் இளம் வீரர்களில் கவனம் செலுத்தியதால், அவர் இறுதியில் விளையாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். ஓய்வுக்குப் பிறகும், கௌதம் கிரிக்கெட்டுடன் நெருக்கமாகத் தொடர்பில் இருக்கிறார். அவர் மைசூரு வாரியர்ஸ் அணியுடன் வழிகாட்டியாக ஈடுபட்டு, 2025 சீசனில் வழிகாட்டியாகவும் வீரராகவும் பணியாற்றி வருகிறார். கூடுதலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார்.