கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 16ஆவது லீக் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்து பல சாதனைகளை படைத்தது.
பின்னர் 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. இதில் பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த வைபவ் அரோரா பந்தில் வருண் சக்கரவர்த்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மிட்செல் மார்ஷ், கேகேஆர் அணியில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் ஸ்டார் எடுத்த முதல் விக்கெட் இதுவாகும். இவரைத் தொடர்ந்து அபிஷேக் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் வைபவ் அரோரா பந்தில் நடையை கட்டினார். டேவிட் வார்னர் 18 ரன்களில் ஸ்டார்க் பந்தில் கிளீன் போல்டானார்.
ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் பண்ட் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவ்வளவு தான் டெல்லி கேபிடல்ஸ் சேப்டர் முடிந்தது. பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹாட்ரிக் வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. ராஸ்தான் ராயல்ஸ் 2ஆவது இடத்தில் இருக்கிறது.
கேகேஆர் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட் எடுத்தனர். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.