நார் நாரா கிழித்த நரைன், ரகுவன்ஷி, ரஸல் – சிஎஸ்கே, ஆர்சிபி சாதனை முறியடித்து, 272 ரன்கள் குவித்த கேகேஆர்!

By Rsiva kumarFirst Published Apr 3, 2024, 9:51 PM IST
Highlights

விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வரும் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது ஐபிஎல் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், கேகேஆர் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து அங்க்ரிஷ் ரகுவன்ஷி களமிறங்கினார்.

நரைன் மற்றும் ரகுவன்ஷி இருவரும் அதிரடியாக விளையாடி கேகேஆர் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளேயில் கேகேஆர் ஒரு விக்கெட் இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. சுனில் நரைன் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். முதல் 10 ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்தது. அடுத்த 18 பந்துகளில் 33 ரன்கள் என்று மொத்தமாக 85 ரன்கள் எடுத்து நரைன் ஆட்டமிழந்தார். இதில், 7 சிக்ஸ் மற்றும் 7 பவுண்டரி அடங்கும்.

இவரைப் போன்று அறிமுக வீரர் ரகுவன்ஷி தன் பங்கிற்கு 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக, சுப்மன் கில் 18 வயது 237 நாட்களில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அறிமுக போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். இவரைத் தொடர்ந்து ரகுவன்ஷி 18 வயது 303 நாட்களில் அரைசதம் அடித்துள்ளார். அவர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது கேகேஆர் 13.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. பின்னர் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து விளையாடினர். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 2 சிக்ஸ் உள்பட 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிங்கு சிங் வந்தார். அவரும் தன் பங்கிற்கு 3 சிக்ஸர், ஒரு சிக்ஸர் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் ஆண்ட்ரே ரஸல் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் இஷாந்த் சர்மாவின் முதல் பந்திலேயே யார்க்கர் பந்துக்கு கிளீன் போல்டானார். இதில், சற்றும் எதிர்பார்க்காத ரஸல் மைதானத்திலேயே படுத்த சம்பவம் நடந்தது. மேலும், ஆட்டமிழந்த நிலையில், இஷாந்த் சர்மாவிற்கு பாராட்டு தெரிவித்தார். கடைசியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது.

இதன் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (245/6), மும்பை இந்தியன்ஸ் (246/5), சென்னை சூப்பர் கிங்ஸ் (246/5), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (248/3), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (257/5) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (263/5) ஆகிய அணிகளின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை முறியடித்துள்ளது. 6 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்த 277/3 ரன்கள் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.

டெல்லி அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், கலீல் அகமது மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

click me!