விக்கெட் கீப்பிங் செய்யும்போதுதான் எனக்கு செம ஐடியாவே வந்துச்சு.. கேஎல் ராகுல் பெற்ற தெளிவு

By karthikeyan VFirst Published Jan 25, 2020, 4:35 PM IST
Highlights

கேஎல் ராகுல் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். 
 

தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், முதலில் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரிதிமான் சஹாவே மீண்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்துவந்த ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு ஆளாகிவந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்ததால், அந்த போட்டியில் அவரால் விக்கெட் கீப்பிங் செய்யமுடியாமல் போனதையடுத்து, கேஎல் ராகுல் கீப்பிங் செய்தார். 

கேஎல் ராகுல் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக விக்கெட் கீப்பிங் செய்ததை அடுத்து, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவரே விக்கெட் கீப்பிங் செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முழுவதும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ததுடன் அருமையாக பேட்டிங்கும் ஆடினார். ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிவதால், இது அணிக்கு நல்ல பேலன்ஸை அளிப்பதால், இப்போதைக்கு ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார். இந்திய அணியில் இப்போதைக்கு எந்தவித மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை என்று கேப்டன் கோலி தெரிவித்தார். 

நியூசிலாந்து தொடரிலும் ராகுலே கீப்பிங் செய்வார் என்று கோலி தெரிவித்தார். அதேபோலவே முதல் டி20 போட்டியில் ராகுல் தான் கீப்பிங் செய்தார். அந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 27 பந்தில் 56 ரன்களை குவித்து, 204 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அதிரடியான அடித்தளத்தை அமைத்து கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

Also Read - தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு 3 முக்கியமான முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி

இந்நிலையில், அந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், விக்கெட் கீப்பிங் குறித்து பேசினார். அப்போது, சர்வதேச போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதை நான் உண்மையாகவே மிகவும் நேசிக்கிறேன். விக்கெட் கீப்பிங் எனக்கு புதிதல்ல. உள்நாட்டு போட்டிகளில் நிறைய விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறேன். ஐபிஎல்லில் நான் ஆடும் அணிக்கும் நான் தான் விக்கெட் கீப்பிங் செய்கிறேன். எனவே எனக்கு அந்த பணி புதிதல்ல. ஸ்டம்புக்கு பின்னால் நிற்பதை நான் மிகவும் விரும்புகிறேன். ஆடுகளத்தின் தன்மையை உற்றுநோக்கி, ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பவுலர்களுக்கும் கேப்டனுக்கும் என்னால் ஆலோசனை வழங்க முடிகிறது. ஆடுகளம் குறித்த சிறந்த ஐடியாவை, எனக்கு விக்கெட் கீப்பிங் அளிக்கிறது. அந்த பொறுப்பை நான் மகிழ்ச்சியாக செய்துவருகிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார். 
 

click me!