தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு 3 முக்கியமான முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி

By karthikeyan VFirst Published Jan 25, 2020, 3:01 PM IST
Highlights

இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் தலைவர் பதவிக்கு 3 முக்கியமான முன்னாள் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்திய அணியை தேர்வு செய்யும் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. 

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு 40 மாதங்களாக இருந்துவந்தது. கடும் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்ட எம்.எஸ்.கே.பிரசாத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க நேற்றே(வெள்ளிக்கிழமை - ஜனவரி 24) கடைசி நாள். இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்யும் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான, பொறுப்பான இந்த பதவிக்கு பல முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

புதிய தேர்வுக்குழு தலைவருக்கான பேச்சு, முன்பு அடிபட்டபோதே தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணனின் பெயர் அடிபட்டது. அதேபோலவே அவர் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு முதல் ஆளாக விண்ணப்பித்தார். மேலும் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அஜித் அகார்கர் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர். 

வெங்கடேஷ் பிரசாத் ஏற்கனவே இந்திய அணியின் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, அவரது கேப்டன்சியில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நீண்டகாலம் ஆடிய அனுபவம் கொண்ட அஜித் அகார்கரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

முன்னாள் வீரர்கள் சேத்தன் ஷர்மா, ராஜேஷ் சவுகான், நயன் மோங்கியா, அமேய் குரேஷியா, அபேய் குருவில்லா ஆகியோரும் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனாலும் சிவராம கிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அஜித் அகார்கர் ஆகிய மூவருக்கும் இடையேதான் போட்டி கடுமையாக உள்ளது. 

Also Read - இந்த வித்தை எல்லாருக்கும் அவ்வளவு ஈசியா வந்துடாது.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு சல்யூட் அடித்த சேவாக்

தேர்வுக்குழு தலைவரை கிரிக்கெட் ஆலோசனைக்குழு தான் தேர்வு செய்யும். எனவே கிரிக்கெட் ஆலோசனைக்குழுவை பிசிசிஐ விரைவில் தேர்வு செய்து அறிவிக்கும். வரும் 27ம் தேதி கிரிக்கெட் ஆலோசனைக்குழுவை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!