
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், 3ஆவது சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தது.
இதில், ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்தனர். மேலும், கேஎல் ராகுல் 17 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. பின்னர் நின்றதைத் தொடர்ந்து மீண்டும் போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை பெய்ததைத் தொடர்ந்து போட்டி ரிசர்வ் டேக்கு அறிவிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்த போட்டியானது மழையால் தடைபட்டது, பின்னர் 4.40 மணிக்கு போட்டி தொடங்கப்பட்டது. இதையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இன்றைய போட்டியை தொடங்கினர். இதில் தொடக்கம் முதல் நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை பெற்று வந்து கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அதன் பிறகு உடல் தகுதியை நிரூபித்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 4ஆவது இடத்தில் களமிறங்கி ஒருநாள் போட்டியில் தனது 14ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தப் போட்டியில் 60 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். தற்போது வரையில் கேஎல் ராகுல் 84 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
தற்போது வரையில் இந்திய அணி 41 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில் விராட் கோலியும் ஒருநாள் போட்டியில் தனது 66ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். 55 பந்துகளில் 66ஆவது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இந்தப் போட்டியில் விராட் கோலி மொத்தமாக 98 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 13000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது வரையில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.