
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், இந்த சீசனில் கேகேஆர் அணியிலிருந்து இங்கிலாந்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஹாரி கர்னி விடாலிடி பிளாஸ்ட் தொடரில் காயமடைந்ததால் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார்.
எனவே அவருக்கு பதிலாக அமெரிக்க கிரிக்கெட் அணியின் 29 வயது ஃபாஸ்ட் பவுலரான அலி கானை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அலி கான் 17 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக்கில் 2016ம் ஆண்டு கயானா அமேசான் வாரியர்ஸ் அணியிலும், அதன்பின்னர் 2018லிருந்து இதுவரை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியிலும் ஆடிவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் டைட்டிலை வென்றது. அந்த அணியில் அலி கான் முக்கிய பங்கு வகித்தார். 140 கிமீ வேகத்தில் வீசக்கூடிய அலி கானை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் ஐபிஎல்லில் ஆடவுள்ள முதல் அமெரிக்க கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அலி கான் பெறுகிறார்.