ரசலை மட்டுமே நம்பியிருந்தா இதுதான் கதி.. கேகேஆரை சுருட்டிய சன்ரைசர்ஸ்

By karthikeyan VFirst Published Apr 21, 2019, 5:53 PM IST
Highlights

கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் வழக்கம்போலவே அதிரடியாக ஆடி மிரட்டலான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். கலீல் அகமது வீசிய மூன்றாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 14 ரன்களை குவித்த நரைன் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 
 

ஐபிஎல் 12வது சீசனில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும் கேகேஆர் அணியும் ஆடிவருகின்றன. 

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். 

கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் வழக்கம்போலவே அதிரடியாக ஆடி மிரட்டலான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். கலீல் அகமது வீசிய மூன்றாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 14 ரன்களை குவித்த நரைன் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 

வெறும் 8 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் நரைன். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இதற்கு முந்தைய போட்டிகளை போலவே மிடில் ஓவர்களில் கேகேஆர் அணியின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. 

முதல் 3 ஓவர்களுக்கே 44 ரன்களை குவித்துவிட்ட கேகேஆர் அணி 13வது ஓவரில்தான் 100வது ரன்னை எட்டியது. களத்தில் நிலைத்துநின்று அரைசதம் அடித்த தொடக்க வீரர் லின், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டார். ரிங்கு சிங்கும் தன் பங்கிற்கு 30 ரன்கள் அடித்து நடையை கட்டினார். 

மறுபடியும் ரசல் அடித்தே தீர வேண்டிய கட்டாய நிலை உருவானது. இதுவரை கேகேஆர் அணி வென்ற அனைத்து போட்டிகளிலுமே ரசலின் அதிரடியால் தான். இந்த போட்டியிலும் ரசல் அதிரடியாக ஆடி போட்டியை திருப்பிப்போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனினும் புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசினார். ஆனாலும் அதே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்த கேகேஆர் அணி, 159 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. 

சன்ரைசர்ஸ் அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கேகேஆர். 
 

click me!