IPL 2021 பரபரப்பான கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த திரிபாதி.! டெல்லி அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது கேகேஆர்

By karthikeyan VFirst Published Oct 13, 2021, 11:39 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் சிஎஸ்கேவை எந்த அணி எதிர்கொள்ளப்போகிறது என்பதை தீர்மானிக்கும், 2வது தகுதிச்சுற்று போட்டி  ஷார்ஜாவில் நடந்தது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, வழக்கம்போலவே அவரது இயல்பான அதிரடி ஆட்டத்துடன் தொடங்கினார். அடித்து ஆடி 12 பந்தில் 18 ரன்கள் அடித்த பிரித்வி ஷாவை, தனது முதல் பந்தில் வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி. 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரை இறக்காமல், புதிய முயற்சியாக மார்கஸ் ஸ்டோய்னிஸை இறக்கிவிட்டது டெல்லி அணி. இது தேவையற்ற முயற்சியாக மாறியதுடன், ஒட்டுமொத்த டெல்லி கேபிடள்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரையும் சிதைத்து, பேட்டிங்கையும் கெடுத்துவிட்டது.

பேட்டிங் ஆடுவதற்கு சவாலான ஷார்ஜா பிட்ச்சில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிய ஸ்டோய்னிஸ் 23 பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தவானும் 36 ரன்னில் ஆட்டமிழக்க, சுனில் நரைன், வருண், ஷிவம் மாவி, ஃபெர்குசன் ஆகிய கேகேஆர் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி டெல்லி அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். 

ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் கடைசி வரை நின்று பேட்டிங் ஆடி 27 பந்தில் 30 ரன்கள் அடித்து 20 ஓவரில் 135 ரன்களை எட்ட உதவினார். ஹெட்மயர் அவரது பங்கிற்கு 10 பந்தில் 17 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 136 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணிக்கு வழக்கம்போலவே வெங்கடேஷ் ஐயரும் ஷுப்மன் கில்லும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அபாரமாக அடித்து ஆடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர், 41 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் நிதிஷ் ராணா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா 2வது விக்கெட்டாக ஆட்டமிழந்தபோது, கேகேஆர் அணி 16 ஓவரில் 123 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 4 ஓவரில் கேகேஆர் அணிக்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 17வது ஓவரில் ஷுப்மன் கில்லும் 46 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் 18வது ஓவரை அருமையாக வீசிய ரபாடா ஒரேயொரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

19வது ஓவரை வீசிய நோர்க்யா அந்த ஓவரில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மோர்கன் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் கேகேஆர் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான நிலை ஏற்பட்டது. கடும் நெருக்கடியான அந்த ஓவரை வீசிய அஷ்வின், முதல் 4 பந்தில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஷகிப் அல் ஹசன் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி அனுப்ப, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.

கடைசி 2 பந்தில் கேகேஆருக்கு 6 ரன் தேவைப்பட, திரிபாதி சிக்ஸர் விளாசி கேகேஆரை வெற்றி பெற செய்தார். 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, 2014 ஐபிஎல்லுக்கு பிறகு ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. வரும் 15ம் தேதி நடக்கும் ஃபைனலில் கேகேஆர் அணி, சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.
 

click me!