இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல தகுதியான கேப்டன் ரிஷப் பண்ட் தான்..! முன்னாள் தேர்வாளர் அதிரடி

By karthikeyan VFirst Published May 27, 2021, 9:03 PM IST
Highlights

இந்திய அணியை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்திச்செல்ல தகுதியான கேப்டன் ரிஷப் பண்ட் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.
 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தை உறுதி செய்துள்ள ரிஷப் பண்ட், இந்திய அணியில் எடுக்கப்பட்ட புதிதில் முதிர்ச்சியில்லாமல் ஆடி, இந்திய அணியில் இடத்தை இழந்தார். 

ஆனால் இப்போது அவரது  பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டுமே முன்பைவிட மேம்பட்டிருக்கிறது. இப்போது முதிர்ச்சியுடன் ஆடுகிறார். பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது கேப்டன்சி திறனையும் நிரூபித்துவிட்டார்.

ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் ஐபிஎல் 14வது சீசனில் ஆடாததன் காரணமாக, டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட், ஒரு தேர்ந்த கேப்டனாக செயல்பட்டு, டெல்லி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து  புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க வைத்தார்.

இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு ரிஷப் பண்ட்டுக்கு பிரகாசமாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான கிரண் மோர் தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய கிரண் மோர், இந்திய அணியை அடுத்தகட்டத்தை நோக்கி எடுத்துச்செல்லும் திறன் ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகி கண்டிப்பாக அணியை வழிநடத்துவார். ரிஷப் பண்ட்டின் புத்திக்கூர்மை, அவரது மனோநிலை ஆகியவை அபாரமானவை. எனவே அவர் கண்டிப்பாக இந்திய அணியின் கேப்டனாக உருவெடுப்பார்.

ரிஷப் பண்ட்டின் கெரியரின் தொடக்கத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தார். அவர் மிகவும் இளம் வயதிலேயே இந்திய அணிக்கு வந்துவிட்டார். எனவே அவர் முதிர்ச்சியடைய சில காலம் ஆகும். தோனியுடன் ஒப்பிடப்பட்டு ரிஷப் பண்ட் விமர்சிக்கப்பட்டார். ரிஷப் பண்ட் அளவிற்கு இளம் வயதில் தோனி இந்திய அணிக்குள் வரவில்லை. தோனி அணிக்குள் வரும்போதே சற்று பக்குவப்பட்டிருந்தார்.

ரிஷப் பண்ட் இப்போது சற்று முதிர்ச்சியடைந்திருக்கிறார். இப்போதும் இளம் வயதுதான் ரிஷப் பண்ட்டுக்கு.. இனிமேல் போகப்போக இன்னும் பக்குவபடுவார். விக்கெட் கீப்பர் சிறந்த கேப்டனாக செயல்பட முடியாது என்ற கருத்து நிலவிய நிலையில், அதை தகர்த்தெறிந்தார் தோனி. விக்கெட் கீப்பரால் நல்ல கேப்டனாக திகழமுடியும் என்று நிரூபித்து காட்டினார். ஐபிஎல்லிலும் தோனி, ராகுல், ரிஷப் பண்ட் ஆகிய விக்கெட் கீப்பர்கள் கேப்டனாக செயல்பட்டிருக்கின்றனர். எனவே ரிஷப் பண்ட் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கிரண் மோர் தெரிவித்துள்ளார்.
 

click me!