இப்படி ஒரு ப்ளேயர மிஸ் பண்ணுவோமா..? உண்மையை உணர்ந்து பின்வாங்கிய ஐபிஎல் அணி

By karthikeyan VFirst Published Oct 12, 2019, 11:04 AM IST
Highlights

ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்த 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகள் ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகள் தான். 
 

ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளுமே ஒவ்வொரு சீசனிலும் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடனேயே களமிறங்குகின்றன. ஆனால் கோப்பையை அந்த அணிகளால் வெல்ல முடியவில்லை. அதனால் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், ஒவ்வொரு சீசனிலும் அதிரடியான மாற்றங்களை செய்துவருகின்றன. 

சீசனுக்கு சீசன் மாற்றங்களை செய்வதும், பெரிதாக சோபிக்கமுடியாமல் போவதற்கான காரணங்களில் ஒன்று என்பதை உணராமலேயே அந்த அணிகள் மாற்றங்களை செய்துவருகின்றன. இதில் டெல்லி அணி செய்த மாற்றம்தான் அபத்தத்தின் உச்சம். ஆட்டோ கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்? என்பதுபோல, டெல்லி டேர்டெவில்ஸ் என்று இருந்த அணியின் பெயரை டெல்லி கேபிடள்ஸ் என மாற்றினர். 

இப்படி இருக்க, அடுத்த சீசனையாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்த மூன்று அணிகளும் உள்ளன. பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கடந்த சீசனில் இருந்த மைக் ஹெசன், அடுத்த சீசனில் ஆர்சிபி அணியின் இயக்குநராக செயல்படவுள்ளார். இதையடுத்து அனில் கும்ப்ளேவை புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது பஞ்சாப் அணி. 

பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு சீசன்களாக இருந்துவரும் அஷ்வினை கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் அணியிலிருந்தே தூக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. டெல்லி அணி அஷ்வினை பெற பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் அந்த டீல் வெற்றிகரமாக முடியவில்லை. கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அஷ்வின் பஞ்சாப் அணியிலேயே தொடர்வார் என்பதை அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான  நெஸ் வாடியா உறுதிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள நெஸ் வாடியா, இந்திய அணியில் அஷ்வின் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அஷ்வின் ஒரு அபாரமான வீரர். அஷ்வின் இந்திய அணியின் சொத்து மட்டுமல்ல; எங்கள் அணியின் சொத்தும் கூட. அவர் பஞ்சாப் அணியில் தொடர்வார். அவரது மதிப்பு எங்களுக்கு தெரியும். அவரை வேறு அணிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று வாடியா திட்டவட்டமாக தெரிவித்தார். 
 

click me!