கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

By karthikeyan VFirst Published Dec 19, 2019, 8:33 PM IST
Highlights

ஐபிஎல்லில் கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வினை பஞ்சாப் அணி கழட்டிவிட்டதை அடுத்து புதிய கேப்டனை நியமித்துள்ளது. 

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று(19ம் தேதி) நடந்தது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

ஐபிஎல் 2020க்கான ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் அணி, கடந்த இரண்டு சீசன்களாக கேப்டன்சி செய்த அஷ்வினை கழட்டிவிட்டது. இதையடுத்து புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

பஞ்சாப் அணி கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இன்று ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபரும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸும் நியமிக்கப்பட்டனர். 

ஏலத்தில் மேக்ஸ்வெல்லை டெல்லி கேபிடள்ஸுடன் கடுமையாக போட்டியிட்டு ரூ.10 கோடியே 75 லட்சத்திற்கு எடுத்தது பஞ்சாப் அணி. வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் ஷெல்டான் கோட்ரெலை ரூ.8.5 கோடிக்கும் கிறிஸ் ஜோர்டானை ரூ.3 கோடிக்கும் எடுத்தது. நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமை ரூ.50 லட்சத்திற்கு எடுத்த பஞ்சாப் அணி, இந்திய வீரர்களான ரவி போஷ்னோய், இஷான் போரெல், தீபக் ஹூடா ஆகியோரையும் எடுத்தது.

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்திற்கு இடையே, கேஎல் ராகுல் தான் பஞ்சாப் அணியின் கேப்டன் என்பதை அந்த அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ்வாடியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். எனவே அடுத்த சீசனில் பஞ்சாப் அணியை கேஎல் ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ளார். 
 

click me!