SMAT 2021 ஃபைனல்: சாய் கிஷோர் அபார பவுலிங்.. தமிழ்நாடு அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த கர்நாடகா

By karthikeyan VFirst Published Nov 22, 2021, 1:49 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற இலக்கை தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று நடந்துவருகிறது. தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் (0), மனீஷ் பாண்டே (13) ஆகிய இருவரையும் தொடக்கத்திலேயே வீழ்த்தினார் தமிழ்நாடு ஸ்பின்னர் சாய் கிஷோர்.

கருண் நாயர் 18 ரன்னில் ஆட்டமிழக்க, எஸ்.ஆர்.ஷரத்தை 16 ரன்னில் சாய் கிஷோர் வீழ்த்தினார். அபாரமாக பந்துவீசிய சாய் கிஷோர் 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

87 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட கர்நாடகா அணிக்கு, அதன்பின்னர் அபினவ் மனோகர் மற்றும் பிரவீன் துபே ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் அடிக்க, ஜெகதீஷா சுஜித் டெத் ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாச 20 ஓவரில் 151 ரன்கள் அடித்த கர்நாடகா அணி, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்துள்ளது.

ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கும் டெல்லி ஆடுகளத்தில் 152 ரன்கள் என்பது எளிதாக அடித்துவிடக்கூடிய இலக்கு அல்ல.
 

click me!