விதர்பா அணிக்கு எதிரான அரையிறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி..! ஃபைனலில் தமிழ்நாடு vs கர்நாடகா மோதல்

By karthikeyan VFirst Published Nov 20, 2021, 4:50 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதி போட்டியில் விதர்பா அணியை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 

நடப்பு சாம்பியனான தமிழ்நாடு, ஹைதராபாத், விதர்பா, கர்நாடகா ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் ஒரு அரையிறுதி போட்டியிலும், கர்நாடகா - விதர்பா அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டியிலும் மோதின. 

தமிழ்நாடு - ஹைதராபாத் இடையேயான அரையிறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

கர்நாடகா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான போட்டியும் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் தான் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் மற்றும் மனீஷ் பாண்டே ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 132 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே 42 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரோஹன் கடம் 56 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அபினவ் மனோஹர் 13 பந்தில் 27 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர்கள் அபாரமாக ஆடிய நிலையில், அபினவ் சிறிய கேமியோ பங்களிப்பு செய்தார். மற்றவர்கள் டெத் ஓவர்களில் சரியாக ஆடாமல் ஆட்டமிழந்தனர். 

20 ஓவரில் கர்நாடக அணி 176 ரன்கள் அடிக்க, 177 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய விதர்பா அணி வீரர்கள் அனைவருமே ஓரளவிற்கான பங்களிப்பு செய்தனர். தொடக்க வீரர்கள் அதர்வா டைட் 32 ரன்களும், கணேஷ் சதீஷ் 31 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கேப்டன் அக்‌ஷய் வட்கர் 15 ரன்னிலும் ஷுபம் துபே 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அபூர்வ் வான்கடே 22 பந்தில் 27 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றார். அக்‌ஷய் கர்னேவர் 12 பந்தில் 22 ரன்கள் அடித்தார். அனைத்து வீரர்களுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி நன்றாக தொடங்கினாலும், எந்த வீரருமே கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், 172 ரன்கள் அடித்த விதர்பா அணியால் கூடுதலாக 5 ரன்களை அடித்து வெற்றி பெறமுடியாமல், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது விதர்பா அணி.

4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற கர்நாடக அணி, ஃபைனலுக்கு முன்னேறியது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான ஃபைனல் வரும் 22ம் தேதி டெல்லியில் நடக்கிறது. 
 

click me!