இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல.. தோனிக்காக வரிந்துகட்டிய கபில் தேவ்

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 5:30 PM IST
Highlights

தோனியை விமர்சிப்பது சரியல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. மான்செஸ்டரில் நடந்த போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் 92 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் ஜடேஜா தனி நபராக போராட, அவருக்கு தோனி ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முழு பொறுப்பும் தோனி மீது இறங்கியது. தோனி அதிரடியாக ஆடி வெற்றிகரமாக முடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

இதையடுத்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய அணி தோற்றது. இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஏற்கனவே மந்தமான பேட்டிங்கின் காரணமாக விமர்சிக்கப்பட்டு கொண்டிருந்த தோனி, அரையிறுதி போட்டிக்கு பின்னர் மீண்டும் விமர்சிக்கப்பட்டுவருகிறார். 

ஆனால் தோனியின் மீதான விமர்சனங்கள் சரியானது அல்ல என்று தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் குரல் கொடுத்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய கபில் தேவ், தோனியை விமர்சிப்பது சரியான செயல் அல்ல. மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் எல்லாருக்குமே இது நடக்கும். தோனி அணிக்கு தேவையான பங்களிப்பை சரியாக செய்துகொண்டிருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருப்பதால், அந்த எதிர்பார்ப்பை தோனி பூர்த்தி செய்யாமல் போயிருக்கலாமே தவிர, அணிக்காக சிறப்பாகவே ஆடிவருகிறார். நமது ஹீரோக்களிடம் இருந்து நாம் அதிகமாக எதிர்பார்ப்பது தான் பிரச்னை என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 

click me!