
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடிவருகின்றன. ஹைதராபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தர், க்ளென் ஃபிலிப்ஸ் (விக்கெட் கீப்பர்), உம்ரான் மாலிக், அடில் ரஷீத், புவனேஷ்வர் குமார் (கேப்டன்), டி.நடராஜன், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், கேஎம் ஆசிஃப், யுஸ்வேந்திர சாஹல்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, 20 பந்தில் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் 22 பந்தில் 54 ரன்கள் அடித்து ஃபஸல்ஹக் ஃபரூக்கி பந்தில் ஆட்டமிழந்தார். பட்லரின் அதிரடியால் பவர்ப்ளேயில் 85 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்(2), ரியான் பராக்(7) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து 32 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவித்தார். ஷிம்ரான் ஹெட்மயர் 16 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 204 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு நிர்ணயித்துள்ளது.