டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவுக்கு கொடுக்க வேண்டும் என்று தொடர் நாயகனுக்கான ரேஸில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பரிந்துரைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை(நவம்பர் 13) மெல்பர்னில் இறுதிப்போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இந்த டி20 உலக கோப்பைக்கான தொடர் நாயகனை தேர்வு செய்வதில் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. இந்த தொடரில் சிறப்பாக ஆடிய 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. ரசிகர்களே வாக்களித்து தொடர் நாயகனை தேர்வு செய்யலாம்.
undefined
முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி
மொத்தம் 9 வீரர்களை தொடர் நாயகன் விருதுக்காக ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்திலிருந்து அதிகபட்சமாக 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஆகிய மூவரும், இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா மற்றும் ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா என மொத்தம் 9 வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்துள்ளது. இந்த 9 வீரர்களில் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெறும் வீரர் தொடர் நாயகன் விருதைவெல்வார்.
நாளை இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் தொடர் நாயகன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜோஸ் பட்லர், சூர்யகுமார் யாதவுக்குத்தான் தொடர் நாயகன் விருது வழங்கப்படவேண்டும். சூர்யகுமார் யாதவ் இந்த டி20 உலக கோப்பையில் முழு சுதந்திரத்துடன் பேட்டிங் ஆடினார். அவரது பேட்டிங்கை காண்பதே கண்கொள்ளா காட்சி. அவர் ஆடிய விதம் அபாரமானது. எங்கள் வீரர்கள் இருவரும் இந்த போட்டியில் உள்ளனர். சாம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸும் தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் இருக்கின்றனர். ஃபைனலில் அவர்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில் தொடர் நாயகன் விருதை அவர்கள் இருவரில் ஒருவர் வெல்லவும் வாய்ப்புள்ளது என்றார் ஜோஸ் பட்லர்.
சூர்யகுமார் யாதவ் டி20 உலக கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடி 189.68 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 239 ரன்களை குவித்து, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த 3வது வீரராக திகழ்கிறார்.