ஜோஸ் பட்லர் காட்டடி அரைசதம்.. ஆஸ்திரேலியாவை அசால்ட்டா வீழ்த்தி அரையிறுதியில் ஒரு அடி எடுத்துவைத்த இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Oct 30, 2021, 10:38 PM IST
Highlights

ஜோஸ் பட்லரின் காட்டடி அரைசதத்தால் 12வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதியில் ஒரு அடியை எடுத்து வைத்துவிட்டது இங்கிலாந்து அணி.
 

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் சிறப்பாக ஆடி, அந்த அணிகள் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருந்தன.

இங்கிலாந்து அணி முதலிடத்திலும் (ரன்ரேட்டின் அடிப்படையில்), ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திலும் இருந்த நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் நீயா நானா போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் ஆடின.

துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடியது.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டைமல் மில்ஸ்.

ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் அஷ்டன் அகார் சேர்க்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்களை அவ்வளவு எளிதில் ரன் அடிக்க இங்கிலாந்து பவுலர்கள் அனுமதிக்கவில்லை. ஆஸி., அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் தலா ஒரு ரன்னுக்கு முறையே கிறிஸ் வோக்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகிய இருவரும் வீழ்த்தினர்.

அதன்பின்னர் மேக்ஸ்வெல்(6), ஸ்டோய்னிஸ்(0), மேத்யூ வேட்(18) ஆகியோர் ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்ற கேப்டன் ஆரோன் ஃபின்ச் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஃபின்ச்சுடன் இணைந்து பின்வரிசையில் நன்றாக ஆடிய அஷ்டான் அகர் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பாட் கம்மின்ஸ் 2 சிக்ஸர்களும், மிட்செல் ஸ்டார்க் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, தட்டுத்தடுமாறி ஆஸி., அணி 20 ஓவரில் 125 ரன்கள் அடித்தது.

126 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 22 ரன்னிலும், டேவிட் மலான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸர்களுமாக ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஜோஸ் பட்லர், அரைசதம் அடித்தார். மறுமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், இலக்கு எளிதானது என்பதால் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அதிரடியாக அடித்து ஆடிய பட்லர், 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவிக்க, 12வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அரையிறுதியில் ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது.
 

click me!