நீ அதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்ட.. டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நட்சத்திர வீரர்

By karthikeyan VFirst Published Aug 31, 2020, 10:51 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்து, டி20 தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி போட்டி நாளை நடக்கவுள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடருக்கான டி20 அணியில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனும், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்படுபவருமான ஜோ ரூட்டுக்கு இடம் கிடைக்கவில்லை.

விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித்தை போல 3 விதமான போட்டிகளுக்கும் ஏற்ற வீரர் அல்ல ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் ரூட், டி20 போட்டியில் அந்தளவிற்கு அதிரடியாக அடித்து ஆடி துவம்சம் செய்யும் வீரர் கிடையாது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், அதற்கான வலுவான அணியை தயாரிக்கும் பணியில் இங்கிலாந்து அணி உள்ளது.

கடந்த ஆண்டு, முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி. அதற்காக 2015லிருந்தே தயாரிப்பை தொடங்கிய கேப்டன் இயன் மோர்கன், வலுவான அணியை கட்டமைத்து உலக கோப்பையை இங்கிலாந்துக்கு வென்றுகொடுத்தார். அடுத்ததாக டி20 உலக கோப்பையையும் வென்று கொடுக்கும் முனைப்பில் அவர் உள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரூட் புறக்கணிக்கப்பட்டிருப்பது, டி20 அணியில் அவருக்கான இடத்தை மறுப்பதாகவே பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான டி20 அணியில் பேர்ஸ்டோ, பட்லர், டாம் பாண்ட்டன், மொயின் அலி, ஆர்ச்சர், சாம் கரன், டாம் கரன், டேவிட் மாலன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் உட் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து டி20 அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், டாம் பாண்ட்டன், மொயின் அலி, ஆர்ச்சர், சாம் கரன், டாம் கரன், டேவிட் மாலன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் உட்.

ரிசர்வ் வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன், சகிப் மஹ்மூத்.
 

click me!