#INDvsENG ஜோ ரூட் அபார சதம்; சதத்தை நெருங்கும் சிப்ளி..! விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்திய பவுலர்கள்

By karthikeyan VFirst Published Feb 5, 2021, 4:16 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபாரமாக ஆடி முதல் நாள் ஆட்டத்திலேயே சதமடித்தார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 23 ஓவர்கள் வரை முதல் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். இன்னிங்ஸின் 24வது ஓவரில் 33 ரன்களில் ரோரி பர்ன்ஸ், அஷ்வின் பந்தில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய லாரன்ஸை டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா.

இங்கிலாந்து அணி 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்க, அதன்பின்னர் சிப்ளியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடக்கூடிய ரூட்டும் சிப்ளியும் இணைந்து அஷ்வின், நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 இந்திய ஸ்பின்னர்களின் பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகின்றனர். முதல் செசனின் இறுதியில் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும், 2வது செசன் முழுவதுமாக ஆடி, 3வது செசனிலும் தொடர்ந்து ஆடிவருகின்றனர்.

சிறப்பாக ஆடிய சிப்ளி அரைசதம் அடிக்க, டீ பிரேக்கிற்கு பின்னர் ரூட்டும் அரைசதம் அடித்த ரூட், வேகமாக ஸ்கோர் செய்து சதமடித்தார். இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட்டில் ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு சதமடித்துவிட்டு அதே தன்னம்பிக்கையுடன் இந்தியாவிற்கு வந்த ஜோ ரூட், தனது ஃபார்மை தொடர்ந்துவருகிறார். இந்தியாவுக்கு எதிராகவும் சதமடித்துள்ளார்.

ரூட்டுடன் இணைந்து சிறப்பாக ஆடிவரும் சிப்ளியும் சதத்தை நெருங்கிவிட்டார். களத்தில் நங்கூரமிட்டு மிகச்சிறப்பாக ஆடிவரும் ரூட், சிப்ளி ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் திணறிவருகின்றனர்.
 

click me!