எத்தனையோ ரன் அவுட் பார்த்துருப்பீங்க.. ஆனால் இது அதையெல்லாம் விட வித்தியாசமானது.. உனாத்கத் செம ஷார்ப்.. வீடியோ

By karthikeyan VFirst Published Mar 15, 2020, 9:54 AM IST
Highlights

ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் உனாத்கத் அபாரமான முறையில் வித்தியாசமான ஒரு ரன் அவுட்டை செய்தார். 
 

ரஞ்சி தொடரின் இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியும் பெங்கால் அணியும் மோதின. இந்த போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த சவுராஷ்டிரா அணி, முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. 

இந்த தொடர் முழுவதும் மிக அபாரமாக பந்துவீசி 67 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஒரு கேப்டனாக சவுராஷ்டிரா அணியை முன்னின்று சிறப்பாக வழிநடத்தி, அந்த அணிக்கு முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று கொடுத்தார் ஜெய்தேவ் உனாத்கத். 

ராஜ்கோட்டில் நடந்த இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்களை அடித்தது. அந்த அணி மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் வரை பேட்டிங் ஆடியதால், அந்த போட்டியில் இனிமேல் முடிவு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே முதல் இன்னிங்ஸில் அந்த அணியை விட அதிகமான ரன் அடிப்பது மட்டுமே பெங்கால் அணிக்கு கோப்பையை வெல்வதற்கான வழி. 

அதை மனதில் வைத்து அந்த அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்தனர். சுதீப் சட்டர்ஜி - ரிதிமான் சஹா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். சட்டர்ஜி 81 ரன்களிலும் சஹா 64 ரன்களிலும் ஆட்டமிழந்த பின்னர், அவர்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்த மஜூம்தர், சிறப்பாக ஆடி அவரும் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 63 ரன்களில் 7வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

மஜூம்தர் ஆட்டமிழக்கும்போது பெங்கால் அணியின் ஸ்கோர் 361 ரன்கள். மஜூம்தரை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய சவுராஷ்டிரா கேப்டன் உனாத்கத், அதே ஓவரில் ஆகாஷ் தீப்பை ரன் அவுட் செய்து சவுராஷ்டிரா அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தார். அதன்பின்னர் எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் எளிதாக வீழ்த்தி சவுராஷ்டிரா வென்றது. 

ஆகாஷ் தீப்பின் ரன் அவுட், அவருக்கும் பெங்கால் அணிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. பெங்கால் அணியின் முதல் இன்னிங்ஸின் 153வது ஓவரை வீசிய உனாத்கத், அந்த ஒவரின் நான்காவது பந்தில் மஜூம்தரை வீழ்த்தினார். அதே ஓவரின் கடைசி பந்தில்தான் ஆகாஷ் தீப் ரன் அவுட்டானார். உனாத்கத் வீசிய கடைசி பந்தை அடிக்காமல் விட்டார் ஆகாஷ் தீப். அவர் கிரீஸை விட்டு லேசாக நகர்ந்திருந்ததை கண்ட விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் அடிக்க த்ரோ விட்டார். அது மிஸ்ஸாகி, பவுலர் உனாத்கத்திடம் சென்றது. அதைப்பிடித்த உனாத்கத், நேராக ஸ்டம்பில் அடித்தார். கிரீஸில் சரியாகத்தான் நிற்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்த ஆகாஷ் தீப், உனாத்கத் ஸ்டம்பை அடிப்பார் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் ஆகாஷ் தீப் கிரீஸுக்குள் நிற்கவில்லை. கொஞ்சம் வெளியேதான் இருந்தார். இதற்கிடையே உனாத்கத் சரியாக ஸ்டம்பில் அடித்ததால், ரீப்ளேவில் அது அவுட் என்பது உறுதியானது. உனாத்கத் செய்த அந்த ரன் அவுட்டின் வீடியோ இதோ...
 

click me!