
இந்தியா - இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.
பும்ரா 5 விக்கெட்:
இந்திய அணி வீரர்கள் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணியின் ஸ்பின்னர்களான அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூவரிடமும் தான் இலங்கை அணி விக்கெட்டுகளை இழக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக ஃபாஸ்ட் பவுலர் பும்ரா தான் பவுலிங்கில் பட்டைய கிளப்பினார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய மண்ணில் பும்ரா வீழ்த்தும் முதல் 5 விக்கெட் இதுதான். இதற்கு முன், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 2 முறை 5 விக்கெட் ஹால் வீழ்த்தியிருக்கும் பும்ரா, ஆஸ்திரேலியாவில் ஒருமுறை வீழ்த்தியிருந்தார். இந்தியாவில் இப்போதுதான் முதல் முறையாக வீழ்த்தினார்.
கபில் தேவுடன் இணைந்த ஜஸ்ப்ரித் பும்ரா:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது பும்ராவின் 8வது 5 விக்கெட் ஹால் ஆகும். 29வது டெஸ்ட் போட்டியில் 8வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், விரைவில் 8வது 5 விக்கெட் ஹாலை எட்டிய இந்திய ஃபாஸ்ட் பவுலர்களில் கபில் தேவுடன் இணைந்துள்ளார் பும்ரா. கபில் தேவும் 29வது டெஸ்ட் போட்டியில் தான் 8வது 5 விக்கெட் ஹாலை எட்டினார்.
மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய 4வது இந்திய பவுலர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார். இதற்கு முன்பாக இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அக்ஸர் படேல் ஆகிய மூவரும் பகலிரவு டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.