IND vs NZ டிராவுக்காக போராடும் நியூசிலாந்து..! டீ பிரேக்கிற்கு முன் இந்திய அணிக்கு பிரேக் கொடுத்த ஜடேஜா

By karthikeyan VFirst Published Nov 29, 2021, 2:34 PM IST
Highlights

முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றிக்காகவும், நியூசிலாந்து அணி டிராவுக்காகவும் போராடிவரும் நிலையில், கடைசி நாள் ஆட்டத்தின் டீ பிரேக்கிற்கு முந்தைய கடைசி ஓவரில் ரோஸ் டெய்லரின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஜடேஜா.
 

இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர்கள் டாம் லேதம் (95) மற்றும் வில்  யங் (89) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 51 ரன்களுக்கே கில் (1), மயன்க் அகர்வால் (17), புஜாரா (22), ரஹானே (4), ஜடேஜா (0) ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடி 6வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். அஷ்வின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிதிமான் சஹாவும் இணைந்து சிறப்பாக ஆடினர். அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை காப்பாற்றினார். 65 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சஹாவும் அக்ஸர் படேலும் இணைந்து சிறப்பாக ஆடினர். கழுத்து வலியால் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்யாத ரிதிமான் சஹா, கழுத்து வலியுடன் வந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிதிமான் சஹா 61 ரன்களும், அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய அக்ஸர் படேல் 28 ரன்களும் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, மொத்தமாக 283 ரன்கள் முன்னிலை பெற்று, 284 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 

4ம் நாள் ஆட்டத்தின் கடைசி 4 ஓவர்கள் எஞ்சிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங்கை வெறும் 2 ரன்னில் 3வது ஓவரில் வீழ்த்தினார் அஷ்வின். இதையடுத்து நைட் வாட்ச்மேனாக வில் சோமர்வில் இறக்கப்பட்டார். கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை டாம் லேதமும் வில் சோமர்வில்லும் தொடர்ந்தனர். நைட் வாட்ச்மேனாக இறங்கிய சோமர்வில்லை இன்றைய ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே விரைவில் வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால், 110 பந்துகள் பேட்டிங் ஆடி நேரத்தை கடத்தியதுடன், கிட்டத்தட்ட முதல் செசன் முழுவதுமாக ஆடி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார் சோமர்வில். ஒருவழியாக சோமர்வில்லை 36 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

அரைசதம் அடித்த டாம் லேதமை 2வது செசனில் 52 ரன்களுக்கு அஷ்வின் வீழ்த்த, அதன்பின்னர் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர், ரன்னே அடிக்க முடியாமல் பந்தை கடத்தினார். வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் அணுகுமுறை, அவர்கள் டிராவிற்காகத்தான் ஆடுகிறார்கள் என்பதை காட்டியது. ஆனாலும் இந்திய அணியின் வெற்றிக்கு விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், மிகவும் கவனமாக ஆடியபோதிலும், இந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு, டீ பிரேக்கிற்கு முந்தைய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ரோஸ் டெய்லரை(2) ஜடேஜா வீழ்த்தினார்.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக்கின் போது 4 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 125 ரன்கள் அடித்துள்ளது. கடைசி செசனில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை.
 

click me!