இஷான் கிஷன் காட்டடி சதம்.. விஜய் ஹசாரே தொடர் வரலாற்றில் உச்சபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்த ஜார்கண்ட்

By karthikeyan VFirst Published Feb 20, 2021, 10:38 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக இஷான் கிஷனின் அதிரடி சதத்தால், விஜய் ஹசாரே வரலாற்றில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது ஜார்கண்ட் அணி.
 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் இன்று தொடங்கியது. இதில் ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையே இந்தூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜார்கண்ட் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான இஷான் கிஷன், ஆரம்பம் முதலே அடித்து ஆடி சதமடித்தார். சதத்திற்கு பின்னர் உடனடியாக ஆட்டமிழந்துவிடாமல் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடினார் இஷான் கிஷன்.

94 பந்தில் 19 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 173 ரன்களை குவித்து 28வது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்னும் 22 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், அதற்குள்ளாக 173 ரன்களை குவித்துவிட்டு ஆட்டமிழந்தார். இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இஷான் கிஷனுக்கு பிரகாசமாக இருந்தும் கூட, அவரால் அடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் அமைத்து கொடுத்த அடித்தளம், அந்த அணி பெரிய சாதனை ஸ்கோரை எட்ட உதவியது. 

28வது ஓவரில் அவர் ஆட்டமிழக்கும்போதே ஜார்கண்ட் அணியின் ஸ்கோர் 240 ரன்கள் ஆகும். அவர் அமைத்து கொடுத்த அடித்தளத்தை வீணடிக்காமல் விராட் சிங்(68), சுமித் குமார்(52), அனுகுல் ராய்(77) ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் 50 ஓவரில் ஜார்கண்ட் அணி 422 ரன்களை குவித்தது. இதுதான் விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

இதையடுத்து 423 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மத்திய பிரதேச அணியில் தொடக்க வீரர் அபிஷேக் பண்டாரியும்(42), வெங்கடேஷ் ஐயரும்(23) மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோரே அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 18.4 ஓவரில் வெறும் 98 ரன்களுக்கு சுருண்டது மத்திய பிரதேச அணி. இதையடுத்து 324 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது ஜார்கண்ட் அணி.
 

click me!